பரீட்சை மோசடிகளைத் தடுக்க இராணுவத்தின் உதவி!

பரீட்சைகள் திணைக்களத்தால் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்படும் சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் மாணவர்கள் மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு இராணுவத்திடம் உதவி கோரப்பட்டதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.


இலங்கை சமிக்ஞைப் படையணியின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிய இலட்சினை மற்றும் இணையத்தளம் என்பன அறிமுகப்படுத்தும் நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில்  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது:
பரீட்சைகளின் போது அலைபேசி உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்களைத் தடுப்பதற்கு உதவி செய்யுமாறு இராணுவத்தின் சைபர் பிரிவிடம் உதவி கோரப்பட்டுள்ளது.இதனைத் தடுப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது பரீட்சை நிலையத்துக்குச் செல்லும் சகலரையும் சோதித்துப் பார்க்க வேண்டும். இராணுவத்தால் அதனைச் செய்ய முடியாது. வீண் பிரச்சினைகள் ஏற்படும்.
அத்துடன், அதனைச் செய்வதற்குப் பொலிஸார் உள்ளனர். பரீட்சை நிலையங்களைச் சுற்றி முழுமையாகத் தொலைபேசி தொடர்பாடலைத் துண்டிக்க வேண்டும். ஒரு நிலையத்தில் அதனைச் செய்யமுடியும். சகல நிலையங்களிலும் அதனைச் செய்ய முடியாது.மாற்றுவழி தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.
பரீட்சைகள் மோசடியைத் தடுக்க நாட்டு மக்களின் மனங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். அவ்வாறாயின் ஏனைய வழிமுறைகள் தேவைப்படாது என இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.