புதிய உள்நாட்டு வரியை மக்களால் தாங்கி கொள்ள முடியாது!

புதிய உள்நாட்டு வருவாய் சட்டத்தின் ஊடாக திணிக்கப்பட்டுள்ள வரிகள், மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சரும் ஐ.தே.க எம்.பியுமான ரவி கருணாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைவாக செயற்படுவதாயின், நாட்டில் அரசாங்கமொன்று தேவையில்​லை என்றார்.  
“சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைவாகவே, இவையாவும் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய சட்டத்தின் மூலம் வரிச்சுமையானது மக்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளது. அதனை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது” என்றார்.  
“ஜனநாயக நாட்டின் மக்கள், இதற்மேலான மாற்றத்தை எதிர்பார்த்திருந்தனர். மக்களுக்கு நிவாரணம் தேவைப்படும் இவ்வாறான காலப்பகுதியில், மக்கள் மீது வரிச்சுமை திணிக்கப்படுகின்றது” என்றும் அவர் கூறினார்.  
சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்ப, இந்த நாட்டின் வரிகளை அதிகரிப்பதற்கு இடமளிக்கமுடியாது. இந்த நாட்டிலிருந்து சர்வதேச நாணய நிதியம் வெளியேறுவதற்கான காலம் கனிந்துவிட்டதென ஏற்கெனவே நான் தெரிவித்திருந்தேன். 
“நாட்டின் வரிக்கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். நிதியமைச்சராக நான் இருந்த காலத்தில்தான், புதிய வரிக் கொள்கை கொண்டுவரப்பட்டது. என்றாலும். நேற்று (01) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது அதற்கு தலைகீழானது” என்றார்.  
கொழும்பு, தொட்டலங்க பிரதேசத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலத்தில் நேற்று (01) நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
“இந்த வரித்திருத்தமானது சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தாகும். இலங்கையர் என்றவகையில், வெளிநாட்டவர்கள் கூறுகின்றவற்றை அப்படியே செயற்படுத்த வேண்டிய தேவையில்லை” என்றார்.  
“மத்திய வங்கியில் ஓய்வு பெறுகின்றவர்கள், சர்வதேச நாணய நிதியத்திலேயே தொழில்வாய்ப்பை தேடுகின்றனர். அவ்வாறானவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஏற்றவகையிலேயே நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப்படுகின்றது” என்றார். 
இந்த வரி அதிகரிப்பு, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும், சீரழிக்கும், மக்கள் வாழ்வாதாரத்​தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்த அவர், அரசாங்கம் மாறினாலும் மத்திய வங்கியின் பேய்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை” என்றார். 
“சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கேற்ப தீர்மானம் எடுப்பதாயின், அரசாங்கம் தேவையில்லை. புதிய வரி திருத்தமானது நாட்டின் சகல பிரிவுகளிலும் அழுத்தங்களை கொடுக்கமுடியும். ஆகையால், மத்திய வங்கிக்கு தகுதியான ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும்” என்றார். 
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது மிகவும் கடினமானது என்று தெரிவித்த அவர், நாட்டின் கடன் இந்தச் சந்தர்ப்பத்தில் 01 சதவீதம் அதிகரிக்கும் என்றார்.
Powered by Blogger.