நலம் வாழ எந்நாளும் சீரகம்!

அஞ்சறைப் பெட்டி 
 டாக்டர் வி.விக்ரம்குமார்
  
சீரகம் என்கிற பெயரே இதன் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. அகத்தைச் சீராக்குவதால் `சீரகம்’ என்று பெயர். சீரகத்தில் சுவை மொட்டுகளை வசீகரிக்கும் ருசியோ, நாசிப் படலங்களை உற்சாகப்படுத்தும் வாசனையோ கிடையாது. மற்ற நறுமண மூட்டிகளுடன் சேர்த்துச் சமைக்கும் போதுதான் சீரகத்தின் வாசனையும் சுவையும் நம்மை ஈர்க்கும்.
 
`பணத்துக்குப் பதிலாகச் சீரகத்தை வரியாகக் கட்டுங்கள்’ என்று ரோமானியப் பேரரசு ஆணையிடும் அளவுக்குச் சீரகத்தின் மதிப்பு உயர்வாக இருந்தது.  உப்பு, மிளகுத்தூளுடன் சீரகத்தையும் சேர்த்து உணவு மேஜைகளின்மீது வைக்கும் வழக்கம் கிரேக்கர் களிடம் இருந்திருக்கிறது. இவ்வழக்கம் மொராக்கோ நாட்டில் இன்றைக்கும் தொடர்கிறது. எலுமிச்சை, மாங்காயில் ஊறுகாய் போடுவதைப் போல இரானியர்கள் சீரகத்தில் ஊறுகாய் தயாரிப்பார்களாம். 

நன்னாரி வேர், வல்லாரைக் கீரை, வெந்தய இலைகள், முள்ளங்கி இலைகள் என அனைத்தையும் நீர் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, நீரை நன்றாக வடிகட்டி விட்டு, லேசாக மசித்து சிறிதளவு சீரகம், கடுகுத்தூளைத் தூவி சாப்பிடுவது வங்காள மக்களின் வழக்கம். இது குளிர்ச்சியை உண்டாக்கி, சிறுநீரைப் பெருக்கும். 

மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் `எலும்பு அடர்த்திக் குறைவு நோயை’ (ஆஸ்டியோபொரொசிஸ்) சீரகம் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான காலத்தில் ஹார்மோன் சுரப்பு குறைவதால் எலும்புகள் பலமிழந்து போகும். இச்சூழலில், சீரகத்தில் உள்ள பைட்டோஸ்ட்ரோஜென்ஸ் என்ற சுண்ணாம்புச்சத்து எலும்புகளுக்கு வலிமையைக் கொடுக்கும். மாதவிடாயின் போது வதைக்கும் அடிவயிற்றுவலிக்கு, பொடித்த சீரகத்தைப் பனைவெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். நமது அன்றாட உணவில் சீரகத்தைச் சேர்ப்பதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதாகச் சமீபத்திய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

40 வயதுக்குமேல் பலருக்கும் வரக்கூடிய பிரச்னை வாய்வுக்கோளாறு. சீரகத்தை இளம் வறுப்பாக வறுத்துப் பொடித்து ஐந்து சிட்டிகை எடுத்து உருக்கிய நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்வுக் கோளாறுகள் விலகும். உணவு சாப்பிட்டதும் வரக்கூடிய எதுக்களித்தல் தொந்தரவு நீங்க, அரை டீஸ்பூன் பொடித்த சீரகத்தை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிடலாம். வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கும் சீரகம் - வெண்ணெய் காம்பினேஷன் பலன் தரும். செரிமான உறுப்புகளுக்கு உற்சாகம் கொடுத்து, வயிற்று மந்தத்தை அகற்றுவதில் சீரகத்துக்கு நிகர் எதுவும் இல்லை. 

சீரகத்தை இரவில் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்த நீரைப் பருகலாம். கோடைக்காலத்தில் நாம் எதிர்பார்க்கும் குளிர்ச்சியை இந்த `சீரக ஊறல்நீர்’ கொடுக்கும். மதிய உணவைச் சாப்பிட மறுக்கும் பள்ளிக் குழந்தைகளுக்குச் சீரகத் தண்ணீரை பாட்டில்களில் நிரப்பிக் கொடுங்கள். உணவை மீதம் வைக்காமல், சாப்பிட்டு முடிப்பார்கள். செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி, பசி உணர்வை மீட்டெடுக்கும் தந்திரம் மனிதர்களைவிட சீரகத்துக்கு நன்றாகத் தெரியும். அசைவ உணவுகளால் உண்டாகும் செரியாமையைப் போக்க சீரக நீர் / சீரகச் சூரணம் உதவும். 

பற்களில் ஏற்படும் சொத்தையைப் போக்கும் தன்மை சீரகத்துக்கு உண்டு.    சீரகம் போட்டுக் கொதிக்கவைத்த நீரைக் கொண்டு காலை மற்றும் இரவு நேரங்களில் இளஞ்சூட்டில் வாய் கொப்புளித்தால் பற்களில் கிருமிகள் தங்காது. 
சீரகத்துக்கு `பித்தநாசினி’ என்ற பெயரும் உண்டு. தலைச்சுற்றல், வாந்தி ஏற்பட்டால் பொடித்த சீரகத்தைத் தேனுடன் சேர்த்துச் சுவைத்துச் சாப்பிடலாம். சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் `பஞ்சதீபாக்கினி சூரணம்’ அனைவரது வீட்டிலும் இருக்கவேண்டிய அத்தியாவசியமான மருந்து. இதை ஒரு கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் செரிமானக் கோளாறு, பசியின்மை, வாந்தி, பித்தம், வாய்வுக்கோளாறுகள் சரியாகும்.
தலைவலி, கண்ணெரிச்சல், அதிக ரத்த அழுத்தம், பித்தக்கோளாறுகளைப் போக்க சீரக எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். 

சீரகத்தை வறுத்துப் பயன்படுத்துவதால், அதன் மருத்துவக் குணம் மிக்க வேதிப்பொருள்களின் வீரியம் அதிகரிக்கும். பொடித்த சீரகத்தை, நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு பலம் தரும். சீரகப் பொடி அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். திப்பிலிப் பொடியுடன் சீரகப் பொடி சேர்த்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் விக்கல் குணமாகும்.  

சர்க்கரை நோய் தொடர்பாக எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சீரகம் கணையத்தை சிறப்பாகச் செயல்பட வைப்பதுடன், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதும் தெரியவந்துள்ளது. கூடவே அதிக கொழுப்பையும் குறைக்கும். நீண்டகால சர்க்கரை நோயாளிகளுக்குக் கண்கள் மற்றும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் பாதிப்புகளைத் தடுக்க சீரகம் பயன்படும்.   

சீரகத்துடன் பல்வேறு தாவரங்களின் காய்ந்த சருகுகளையும் வேறு சில பொருள்களையும் கலப்படம் செய்கிறார்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.  உண்மையான சீரகம் நமது ஆரோக்கியத்தை சீராட்டும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.