வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் பதினாறாம் கட்டம்!

வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் பதினாறாம் கட்டமானது கடந்த (07.04.2018) சனி அன்று, காலை 10:00மணியளவில் அவரது மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்றது.
புலம்பெயர் அன்பர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் குறித்த செயற்றிட்டத்தின் பதினாறாம் கட்டத்தில் தாயகத்தை சேர்ந்த பதினொரு குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பினை நோக்காக கொண்டு நாளாந்த உணவுத்தேவைக்கு இடர்படும் குடும்பங்களுக்கான ஒத்துழைப்பாக வாழ்வோம் வளம் பெறுவோம் எனும் செயற்றிட்டமானது வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
புலம்பெயர்ந்து வாழும் அன்பரின் பணப்பங்களிப்பில் நடைபெற்று முடிந்த பதினாறாம் கட்டத்துடன், இதுவரையில் ஐந்நூற்று எழுபத்தெட்டு குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டிருப்பதாக துரைராசா ரவிகரன்   தெரிவித்துள்ளார்.
இக்கட்டத்திற்காக புலம்பெயர்ந்து கனடாவில் வாழும்  மாதவன் பொன்னம்பலம் அவர்கள் பதின்மூவாயிரத்து நாநூறு உரூபாய் பெறுமதியில் இவ்வுதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செயற்றிட்டத்தின் பதினாறாம் கட்டத்தில் பதினொரு குடும்பங்களுக்கு 200 கிலோ அரிசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.