வடக்கில் நியமிக்கப்பட்ட சிங்களச் சிற்றூழியர்கள் மீள அழைக்கப்படுவார்கள்!
வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட சமுர்த்தித் திணைக்களத்தின் சிங்களச் சிற்றூழியர்கள் மீள அழைக்கப்படுவார்கள் என்று உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
வடக்கு – கிழக்கில் சிங்கள சிற்றூழியர்கள் நியமிக்கப்படக் கூடாது என்பது உள்ளிட்ட 10 நிபந்தனைகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமை அமைச்சரிடம் முன்வைத்திருந்தது. அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக தலைமை அமைச்சர் கூட்டமைப்புக்கு எழுத்துமூலம் கடிதம் வழங்கியிருந்தார்.
இதற்கு அமைவாக, தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கூட்டமைப்பு எதிர்த்திருந்தது. வாக்குறுதி வழங்கி 20 நாள்களுக்குள்ளேயே, சமுர்த்தி திணைக்களத்தால் யாழ்ப்பாணத்தில் சிற்றூழியர்களாக சிங்களவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த விடயம் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்ததாவது-,
இந்த விடயம் தொடர்பாக சமூகவலுவூட்டல் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். இது தொடர்பில் ஆராய்ந்து அமைச்சர் எனக்குப் பதிலளித்தார்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மான விடயத்தை தொடர்ந்து, சமூக வலுவூட்டல் அமைச்சராக இருந்த எஸ்.பி.திசாநாயக்க பதவி விலகியிருந்தார். அவர் பதவி விலகிச் செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் 300 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் 190 பேர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவின் தொகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த நியமனங்கள் தொடர்பாக ஆராயப்படும் அதேவேளை, வடக்கு மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கள சிற்றூழியர்களை மீள அழைக்குமாறு அமைச்சர், செயலருக்கு உத்தரவிட்டுள்ளார் என்று என்னிடம் தெரிவித்தார் – என்றார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை