இப்படியும் ஒரு ஆசை..!

அடுத்த பிறவி ஒன்றிருந்தால்
ஆணாய்ப் பிறக்க வேண்டும்.-ஒரு
அழகுப் பெண்ணைக் காதலித்து
அவள் அன்பில் திளைக்க வேண்டும்.
அவள் சுருண்ட கூந்தலும்
குண்டு விழிகளும் என்னைக்
கொன்று தின்ன வேணும்.
நல்ல குழந்தைச் செல்வங்களாய்
எந்தன் பிள்ளைகளே அங்கும்
பிறக்க வேண்டும்.

ஒரு குறும்புக்கார அப்பனாயும் நல்ல
குணங்கள் நிறைந்த அப்பனாயும்
பொறுப்புடன் நடக்க வேண்டும்.
என் பத்தினியின் படிப்பிலும்
கவனம் செலுத்தும் நல்ல
கணவனாய் இருக்க வேண்டும்.
நல்ல கற்பில் சிறந்த கணவனிவன் என்று
அவளின் நெஞ்சம் குளிர வேணும்.
பெண்மையைப் போற்றும் உத்தமன்
இவனெனன்று
உலகமே போற்ற வேண்டும்.- நல்ல
சத்திய புருசனைப் பெற்ற என் மனைவியை
சற்றுப் பொறாமைக் கண்களும்
உற்று நோக்க வேண்டும்.-அவளை
அள்ளி ஏந்தும் அழகைக் கண்டு
கொள்ளிக் கண்கள் கொழுந்தாய்
எரிய வேணும்.
தோளிலும் மார்பிலும் தூக்கியணைத்து
உலகத்தை உணர்த்த வேண்டும்.
எந்தன் பிள்ளைக் கனிகளும்
நல்ல அப்பா கிடைந்ததெனப்
பெருமையாய் சொல்ல வேண்டும்.
என்னைப் பெற்றதனால்
என் தாயும் தந்தையும்
உவகை அடைய வேண்டும்.
நல்ல சகோதரனாய் பிறந்தானே இவன் என
உடன் பிறப்புக்கள் மகிழ வேணும்.
அடுத்த பிறவி ஒன்றிருந்தால் நான்
ஆணாய்ப் பிறக்க வேண்டும்.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Powered by Blogger.