கிளிநொச்சியில் அனுஸ்டிக்கப்பட்ட உண்மைக்கான உரிமைக்குரிய சர்வதேச தினம்!


நிலைமாறுகாலநீதியை வலியுறுத்தியும்,நல்லிணக்கப் பொறிமுறையினை உறுதிப்படுத்துமாறும் கோரி உண்மைக்கான உரிமைக்குரிய சர்வதேசதினம் அண்மையில் கிளிநொச்சி திருநகர் பொதுநோக்கு மண்டபத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்ட அமரா மற்றும் சமாசப் பெண்கள் கலந்து கொண்டனர். சமூக அணிதிரட்டாளர்களான திவாகர்,சாள்ரஸ்,பானுசந்தர் ஆகியோர் நிலை மாறுகால நீதிதொடர்பான விளக்கங்களை இதன் போது பொதுமக்களுக்கு வழங்கினர். ஐக்கியநாடுகள் சபையின் 37வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெறும் இந்தத் தருணத்தில் நிலைமாறுகால நீதியை வலியுறுத்தி நல்லிணக்கப் பொறிமுறையை உறுதிப்படுத்தக் கோரி சர்வதேச உண்மைக்கான உரிமைகள் தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை அரசானது கடந்த-2015 ஆம் ஆண்டு மனிதஉரிமைகள் பேரவைக்கு நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்தும் வகையில் நல்லிணக்கப் பொறிமுறையினை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தது. ஆனால், இன்றுவரை காத்திரமான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. காணமல் போகச் செய்யப்பட்டோர் ஒருவருடத்திற்கு மேலாக கிளிநொச்சி, முல்லைத்தீவு,மருதங்கேணி,திருகோணமலை,மட்டக்களப்பு என நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். இதுவரை எந்தவித உண்மைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவில்லை. விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக நீண்டகாலம் உரிமைக்குரல் கொடுத்து வருகின்றது. நிலைமாறுகால நீதியின் செயற்பாட்டில் காணாமல் போணவர்கள் தொடர்பில் உண்மையினைக் கண்டறிதல்,பாதிக்கப்பட்டமக்களுக்கு இழப்பீடு வழங்குதல்,நம்பிக்கையினைக் கட்டியெழுப்புதல்,குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பொறுப்புக் கூற வைத்தல்,நிலையான சமாதான சமூகத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனையும், ஏனைய அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யப்படவேண்டும்,காணாமல் போன அலுவலகம் மாவட்ட ரீதியாக திறந்து மக்கள் பிரச்சினைகள் நீதியான முறையில் தீர்க்கப்படவேண்டும். தமிழ் அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் நியமிக்கப்படவேண்டும், இராணுவத்திடமுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களுடன் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெறக் கூடாது எனவும் மக்கள் கருத்துத் தெரிவித்தனர். இந் நிகழ்வில் மக்கள் தமக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவேண்டும் என உணர்வெழுச்சியுடன் மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நிலை மாறுகாலநீதியின் நான்கு தூண்களானஉண்மையைக் கண்டறிதல்,பொறுப்புக் கூறல், இழப்பீடுவழங்கல்,நிறுவன ரீதியான சீர்திருத்தம் அல்லது மீளநிகழாமை என்பன பேச்சளவில் இல்லாமல் அவற்றைச் செயலில் உறுதிப்படுத்தவேண்டும். தமிழ்மக்களுக்குச் சரியான முறையில் நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என கிளிநொச்சி,முல்லைத்தீவு அமரா மற்றும் சமாசப் பெண்கள் இணைந்து வலியுறுத்தினர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.