சிங்கள மாணவர்கள் ஏதோ ஒரு பின்புலத்தில் செயற்படுகிறார்கள்!
என்ன நடந்தாலும் பரவாயில்லை புத்தர் சிலையை அமைத்தே தீருவோம் என்று பிடிவாதமாக நின்றவர்கள் ஒரு சில சிங்கள மாணவர்களே. ஏதோ ஒரு பின்புலத்தில் தான் அவர்கள் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறு யாழ்ப்பபாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா வளாக சிங்கள மாணவர்களால் புத்தர் சிலை அமைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தினர். அதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவித்தாவது-,
கடந்த சனிக்கிழமை வவுனியா வளாகத்தின் விடுதிப் பகுதிக்கு ஒரு சில மாணவர்களால் புத்தர் சிலை வைப்பதற்கான கூடு ஒன்று கொண்டுவரப்பட்டது.
அனைத்து மதங்களுக்கும் உரிய வணக்கத் தலங்களை அமைப்பதற்குரிய நிரந்தரமான திட்டத்துக்காக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கேயே வணக்கத் தலங்களை அமைக்க முடியும்.
விடுதிப் பகுதியில் இடம் போதாதுள்ளதுடன், இந்த நடவடிக்கையால் மாணவர்களுக்கு இடையில் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று நாம் மாணவர்களுக்குக் கூறினோம்.
அவர்கள் எங்கள் கோரிக்கையை செவிமடுக்காமல் தாம் அங்கு தொடர்ந்து வைத்திருப்போம் என்று கூறினர். நேற்று (நேற்று முன்தினம்) எமது நிர்வாகம் கூடி முடிவெடுத்ததன்படி அந்தக் கூட்டை நாம் எமது கட்டுப்பாடில் எடுத்து வந்தோம். எமது உத்தியோகத்தர்களைப் பின்தொடர்ந்து வந்த மாணவர்கள் அவர்களை வழிமறித்து முரண்பட்டனர்.
துறைத் தலைவர்கள், பீடாதிபதிகள் அனைவரும் அந்த இடத்துக்குச் சென்று மாணவர்களுடன் பேசியிருந்தனர். அவர்கள் எம்மை மதிக்காமல் முரண்பட்டதுடன் எம்மை தாக்கவும் முயன்றனர்.
எனினும் நாம் அந்தக் கூண்டை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததுடன், வணக்கத்தலம் நிரந்தரமாக அமைக்ககும் பொழுது அதை மீண்டும் வழங்குவோம் என்று அவர்களுக்குக் கூறி இருக்கிறோம்.
இது தொடர்பாக வளாக மாணவர் ஒன்றியத் தலைவருடன் நாம் பேசினோம். இது தொடர்பாகத் தனக்குத் தெரியாது என்றும் எமக்கும் இந்தச் செயற்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் ஒன்றியத்தலைவர் கூறினார்.
அதன்பின்னர் நாம் விசாரித்தோம். ஒரு நான்கு மாணவர்களே இதை முன்னின்று செயற்படுத்தியுள்ளனர். நீங்கள் எம்மைப் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியில் அனுப்பினாலும் பரவாயில்லை, நாம் என்னவும் செய்வோம் என்று அவர்கள் நிர்வாகத்துக்கு அறிவித்திருக்கிறார்கள்.
இந்தச் செயற்பாடு ஒரு பின்னணியுடன் நடத்தப்படுகின்றது என்றே எமக்குத் தெரிகிறது. பல்கலைக்கழக சமூகத்துக்குள் ஒரு குழப்ப நிலை உருவாகுவதைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கல்விச் செயற்பாடுகளையும் காலவரையின்றி மூடியுள்ளோம்.-என்றார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை