முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்.!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை கண்டிக்கும் வகையில்
வடமாகாணசபையின் அனைத்து உறுப்பினர்களும் எதிர்வரும் 10ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் 120ஆவது அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டு வந்த பிரேரணையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், இவருடைய பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைய அமர்வில் மேற்படி சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும், வடமாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று எதிர்ப்பை காட்டவேண்டும் என மாகாணசபை உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்கள், அவைத்தலைவர் உள்ளிட்ட 38 மாகாணசபை உறுப்பினர்களும் முல்லைத்தீவுக்கு சென்று எல்லை கிராமங்களை பார்வையிடுவதுடன் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தையும் முன்னெடுக்க உள்ளனர்.
அத்துடன், மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.