தமிழர்களுக்குள் பிரிவினை விரிசல் சாபக்கேடு!

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் பிழையான
நேரத்தில் முடிவுகளை எடுப்பதன் காரணமாகவே தமிழர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுவருகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட புத்தாண்டு விளையாட்டு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் பிழையான நேரத்தில் முடிவுகளை எடுப்பதன் காரணமாகவே எமக்குள்ளே விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
நாம் ஒற்றுமையில்லாத சமூகமாக தொடர்ந்தும் வாழ்ந்தால் எமது இனமே இந்த நாட்டிலிருந்து அழிந்தவிடக்கூடிய நிலை இருக்கின்றது. பெரும்பான்மைச் சக்திகளும் தமிழினத்தை கூறுபோட்டு எமது பலத்தை அரசியல் ரீதியாக அழித்தொழிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.
எமது போராட்டமும் ஒற்றுமையீனத்தால் திசை திருப்பப்பட்டது. அரசியல் ரீதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த நாங்கள் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். எனப்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வெளியேறிச் சென்றது.
கடந்த உள்ளளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகளினால் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியது. ஆனால் பெரும்பான்மைக் கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச சபைகளிலும் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டார்கள்.
கடந்த காலங்களில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துகளையும் பறிகொடுத்த நாம் எமது மக்களுக்கான உரிமைகள் கிடைக்கும் வரையாவது ஒன்றாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.