போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் கீழக்கரை நகர் சமூக அமைப்பினர் கோரிக்கை மனு!

கீழக்கரையில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று நகர் சமூக அமைப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
   ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம், கீழக்கரை நகர் நல இயக்கம், இந்திய தவ்ஹீத் ஜமாத், சட்ட போராளிகள் இயக்கம், வடக்குத்தெரு சமூக நல அமைப்பு, இஸ்லாமிய கல்வி சங்கம் ஆகியவற்றின் சார்பில் அதன் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரம் அச்சமின்றி நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி அதற்கு அடிமையாகி வருகின்றனர். 
     இதுதவிர, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையால் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இதுகுறித்து காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்து கீழக்கரையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையையும், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையையும் தடுத்து இளைஞர்களின் வளமான எதிர்காலத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி இதுகுறித்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதேபோல, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனாவை சந்தித்தும் கீழக்கரை சமூக நல அமைப்பினர் இதுகுறித்து மனு கொடுத்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.