மீன்பிடிக்கச் சென்ற மீனவரை நடுக்கடலில் காணவில்லை!

வாழைச்சேனையிலிருந்து கடந்த சனிக்கிழமையன்று, ஐந்து நாட்கள் பயணத்தை மேற்கொண்டு, இரு நபர்களுடன், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரைக் காணவில்லையென, வாழைச்சேனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ஓட்டமாவடி 3ஆம் வட்டார மீன்பிடி வீதியைச் சேர்ந்த அசனார் ஜுனைதீன் (வயது 45) என்பவரே, கடலில் வைத்துக் காணாமல் போயுள்ளார்.
மேற்படி மூவரும், மீன்பிடிப்பதற்காக இயந்திரப் படகு ஒன்றில் பயணித்துள்ளனர் எனவும் செவ்வாய்கிழமை இரவு, மீன்பிடிக்க வலைகளைப் தயார்படுத்தி விட்டுத் தூங்கியதாகவும், சிறிது நேரத்துக்குப் பின்னர் கண்விழித்துப் பார்த்த போது, அசனார் ஜுனைதீன்  என்பவரைக் காணவில்லை என படகில் இருந்த ஏனைய இருவரும் படகு உரிமையளருக்குத் அலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மேற்படி இருவரும், நேற்று (18) மாலை கரைக்குத் திரும்பி, குறித்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனரெனவும், கடலில் காணாமல் போன அசனார் ஜுனைதீன் என்பவரைத் தேடும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த வாழைச்சேனைப் பொலிஸார், கரைக்கு வந்த அவ்விருவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, காணாமல் போன மீனவர் தொடர்பாகத் தகவல் அறிந்தால் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையம் அல்லது உறவினர்களின் 0776016838, 0775632102 என்ற அலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
Powered by Blogger.