முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரை ஏமாற்றிய 'பலே' தம்பதி கைது!

சேலத்தில் நில மோசடி புகாரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரை ஏமாற்றிய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் அம்மா பேட்டையைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(70). இவரது மனைவி சவிதா(60). இவர்களுக்கு கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் 4,840 சதுர அடி பரப்பளவில் ஓர் இடம் இருந்தது. இந்த இடத்தை, கடந்த 1997-ம் ஆண்டு, அருண் என்பவருக்கு விற்பனை செய்து விட்டனர்.
ஆனாலும், இவர்கள் அந்த நிலத்தின் இடத்தின் ஆவணங்களைப் போலியாக தயாரித்து பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் ஏற்கெனவே, போலி கலர் ஜெராக்ஸை வைத்து, திருப்பூர் குமரன் நகர் பகுதி கரூர் வைசியா வங்கியில் ரூபாய் 1.20 கோடி கடன் வாங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர், பிணையில் வந்த இந்தத் தம்பதியினர், அவர்களது மகன் பிரபுவுடன் சேர்ந்து மீண்டும் மோசடி பணிகளில் தீவிரமடைந்தனர். குறிப்பாக, ஆர்.எஸ்.புரம் நிலத்தை, திருப்பூரைச் சேர்ந்த பிரசாந்த், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பாக்யராஜ் உள்ளிட்ட பல பேரிடம் போலியாக ஒரே பத்திரத்தை வைத்து பல லட்சம் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர். இந்நிலையில், இடத்தின் உரிமையாளர் அருண், கோவை பத்திரப்பதிவு அலுவலகத்தில், கடந்தாண்டு புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்த அதிகாரிகள் குற்றம் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, உயர் அதிகாரி ராமசாமி உத்தரவின் பேரில் இணைசார்பதிவாளர் எண்-1, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், குற்றத்தில் ஈடுபட்ட தம்பதியரை, கோவை போலீஸார், சேலத்தில் கைது செய்தனர். இந்த மோசடி சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் ராஜமாணிக்கத்தின் மகன், பிரபு வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளார். இவரையும் பிடிக்க போலீஸார் தீவிரமாகியுள்ளனர். புகார் கொடுத்தவரும், இடத்தின் உரிமையாளருமான அருண், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.