உளவியல் சாதனமாக உணர்வுகளை ஒருங்கிணைக்கும் ஃபேஸ்புக்கை மாற்றிய மார்க் !

நெருக்கமானவர்களின் பிறந்ததினம் முதல் நாட்டில் பற்றியெரிகிற செய்திகள் வரை அனைத்தையும் அறிந்துகொள்ள உதவும் அற்புதக் களம்... ஃபேஸ்புக். ஆரம்பத்தில் அறிமுகமானபோது `இதெல்லாம் யாருக்கு வேண்டும்?’ என்று விலகி நின்றவர்கள் பலர். இன்றைக்கு மொபைல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் ஃபேஸ்புக் கணக்கு இல்லாதவர்கள் அரிது. `முகப் புத்தகம்’, `முக நூல்’, `மூஞ்சிப் புத்தகம்’ என்றெல்லாம் தமிழில் இதற்குப் பல பெயர்கள்! ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கைது நடவடிக்கைவரையெல்லாம் கொண்டு போகுமா? நடந்திருக்கிறது, நடந்துகொண்டிருக்கிறது. 
ஃபேஸ்புக்
ஆரம்பித்து, சில வருடங்களிலேயே அபாரமான வரவேற்பைப் பெற்ற ஃபேஸ்புக்கின் மூளை மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg). இவர்தான் இதன் நிறுவனர், சேர்மேன், நிர்வாகச் செயல் அதிகாரி... இன்றைக்கு அவருக்கு 34-வது பிறந்தநாள். ஃபேஸ்புக்கைப்போலவே, மார்க்குக்கும் செல்லப் பெயர்கள் உண்டு.  மார்க் மாமா, மார்க் மச்சான், மார்க் பையன்... நீள்கிறது பட்டியல். ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது, சதா அதிலேயே திளைத்துக் கிடப்பது இன்றைக்கு எக்கச்சக்கமானவர்களின் பொழுதுபோக்கு... அல்ல... முக்கியமான வேலை! இவர்களில் ஆண், பெண் விதிவிலக்குகள் இல்லை.  
தன் நண்பர்களுடன் உறவாட ஓர் உலகத்தை உருவாக்கினார் மார்க். இன்று ஒட்டுமொத்த உலகமும் அவர் உருவாக்கிய உலகில் நண்பர்களாக உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 220 கோடி மக்களுக்கும் மேற்பட்டவர்களோடு இயங்கிக்கொண்டிருக்கும் இயங்குதளமாக இன்று இருக்கிறது ஃபேஸ்புக். திருமண நாள், பிறந்தநாளுக்கு மட்டுமல்ல... செவிலியர் தினம், அன்னையர் தினம் உள்ளிட்ட முக்கிய நாள்களுக்கும் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லும் களமாக இது இருக்கிறது.  
மெரினாவில் போராடிய இளைஞர்களைப் பார்த்து காவல்துறை அதிகாரியொருவர்  ``அனைவரும் வேறு வேறு ஊர் என்கிறீர்கள். எப்படி ஒன்றிணைந்தீர்கள்" என்று கேட்டிருக்கிறார்.  ``ஃபேஸ்புக் மூலமாகத்தான்’’ என்று சொல்லியிருக்கிறார்கள் போராடத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள். சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளம் வந்தபோது, ஃபேஸ்புக்கின் மூலம் ஏராளமான உதவிகள் சரியான நேரத்தில், சரியான இடத்துக்குப் போய்ச் சேர்ந்தன. நல்லவை ஒருபுறம் நடக்க, ஃபேஸ்புக்கின் மூலமாகப் பல விரும்பத்தகாத நிகழ்வுகளும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. `ஃபேஸ்புக் பாதுகாப்பானது அல்ல. அதில் பயனாளரின் தகவல்கள் திருடப்படுகின்றன’ என்ற குற்றச்சாட்டு வந்த பிறகும்கூடப் பலரால் அதைப் பயன்படுத்துவதை நிறுத்த முடியவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம்? 
மார்க்
``மிக எளிதாக அனைவரிடமும் தொடர்புகொள்ளக்கூடிய ஒரு சாதனமாக ஃபேஸ்புக் இருக்கிறது. பல விஷயங்களைத் அறிந்துகொள்ளும் இடமாக,  நண்பர்களுடன் தொடர்ச்சியாக நட்பைப் பேணுவதற்கான இடமாகவும் இருக்கிறது. புதிய மனிதர்களை, அவர்களின் விருப்பு வெறுப்புகளைத் தெரிந்துகொள்ள, நேரிடையாக வெளியில் சொல்லத் தயங்கும் விஷயங்களை, பகிர்ந்துகொள்ள இந்தத் தளம் உதவுகிறது. எளிய மனிதர்களுக்குக்கூட ஓர் அடையாளத்தைத் தருகிறது. ஒருவர் தன் எல்லையை, தொடர்பை விரிவாக்கிக்கொள்ள உதவுகிறது. மனநல மருத்துவர் அசோகன்
எந்த மனிதர்களைப் பற்றியும், அவர்கள் அனுமதிக்கக்கூடிய அளவில் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். கல்லூரிக்கால, பள்ளிக்கூட நண்பனைக்கூட எளிதாகத் தேடிக் கண்டுபிடித்துவிடலாம்.
வெளியே ஊருக்குச் செல்லும்போது பர்ஸ், மாத்திரை, மருந்துகளை, மறந்தாலும்கூட மொபைல்போனை, அதன் சார்ஜரை யாரும் மறப்பதில்லை. அதற்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள்தாம் முக்கியமான காரணம். பிரபலங்களின் அன்றாட நிகழ்வுகளைப்போல, எளிய மனிதன்கூட தன் அன்றாட நிகழ்வுகளை அப்டேட் செய்வதற்கான கருவியாக இது இருக்கிறது. பரிச்சயமில்லாத விஷயங்களில்கூட கருத்துச் சொல்வதற்கான வாய்ப்பளிக்கிறது.
ஃபேஸ்புக் மனிதர்களுக்கு அழகான முகமூடிகளைத் தருகிறது. மற்றவர்களிடம் நேரடியாகப் பேசுவதற்கு வெட்கப்படுபவர்கள், தயக்கமுடையவர்கள்கூட ஃபேஸ்புக்கில் துணிச்சல்மிக்கவர்களாக, கலகலப்பானவர்களாக, மற்றவர்களிடம் உரையாடுவதைப் பார்க்க முடிகிறது. இந்தக் காரணங்களால்தாம் பலர் ஃபேஸ்புக்கை விரும்புகிறார்கள். தன்னுடைய பதிவுகளுக்குக் கிடைக்கும் லைக், ஷேர் எல்லாம் தனக்குக் கிடைக்கும் அங்கீகாரமாக நினைத்து மகிழ்ச்சிகொள்கிறார்கள். தன்னை மற்றவர்கள் ரசிக்க வேண்டும், கொண்டாட வேண்டும், நம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்தத் தளம் தூண்டிவிடுகிறது. அதற்காக,  புதிய செய்திகளைச் சிந்திக்க, தெரிந்துகொள்ளும் வேட்கை உண்டாகிறது. அதற்காக மெனக்கெடவும் செய்கிறார்கள். 
மொபைல் போன்
இப்படி ஃபேஸ்புக்கால் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பலர் பல மணி நேரங்கள் ஃபேஸ்புக்கிலேயே விழுந்து கிடக்கிறார்கள். தொழில்ரீதியாக அல்லாமல் ஆறு மணி நேரத்துக்கும் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்துவது `இன்டெர்நெட் அடிக்‌ஷன்.’ வரையறையில்லாமல் யார் வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்கிற நிலை இப்போது இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான போக்கு. இது மாற்றப்பட வேண்டும்.
சிலர் நாகரிகமற்ற முறையில் தங்களுக்குப் பிடிக்காதவர்களை விமர்சிக்கும் செயல்களும் அரங்கேறிவருகின்றன. தகவல் திருட்டுகளும் நடக்கின்றன. ஒரு மனிதன், எதை விரும்புகிறான் என்பதைத் தெரிந்துகொண்டு, அது தொடர்பான விஷயங்களை அதிகமாகக் காணும்படிச் செய்கிறார்கள். இதனால் உணர்வுரீதியாக அந்த மனிதனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறார்கள். இதுவும் ஆபத்தான போக்கு.
நேரிடையாக மனிதர்களைப் பார்த்துப் பேசி பழகுவது குறைந்துவருகிறது. குடும்பங்களில் தேவையற்ற பிரச்னைகள் உண்டாகின்றன. ஃபேஸ்புக் அடையாளத்தை வைத்து ஒருவரைப் புரிந்துகொள்ள முடியாது. ஒருவர் நேரிடையாக அறிமுகமில்லாமல் ஃபேஸ்புக்கால் மட்டுமே நண்பராகி, அதனால் ஏமாற்றப்படுவதும் நடக்கிறது. என்னைப் பொறுத்தவரை, ஃபேஸ்புக் ஓர் அழகான மாயை. இங்கே நம் உணர்வுகளுக்கு, உணர்ச்சிகளுக்குப் பாதுகாப்பில்லை’’ என்கிறார் மனநல மருத்துவர் அசோகன். 

``பெண்களுக்குத்  தங்களுடைய கருத்துகளை நேரிடையாக வெளிப்படுத்த சமூகத்தில் ஒரு தடை (Social Anxity)  இருக்கிறது. அந்தத் தடையை ஃபேஸ்புக் போக்கியிருக்கிறது. அதனால்தான் பெண்கள் பெரும்பாலும் ஃபேஸ்புக்கை விரும்புகின்றனர். மனநல மருத்துவர் குறிஞ்சி
மனிதன் ஒரு சமூக விலங்கு. நிறையப் பேரிடம் பேச வேண்டும், தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவது மனிதனின் இயல்பு. இது பெண்களுக்கும் பொருந்தும். அதற்கான வாய்ப்பை ஃபேஸ்புக் வழங்குகிறது. சமூகத் தடைகளால் வெளிப்படுத்த முடியாத தன்னுடைய ப்ளஸ், மைனஸ், ஐடியாஸ் எக்ஸ்போஸ் செய்வது ஆகியவற்றுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தங்களுக்குத் தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொண்டு, அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டு, அதன் மூலம் கிடைக்கும் பாராட்டை ஓர் அங்கீகாரமாகக் கருதுகிறார்கள். 
பெண்களைப் பொறுத்தவரை நேரிடையாக ஓர் ஆணைப் பார்த்துப் பேசி பழகுவதைவிட ஃபேஸ்புக் ஓர் எளிய சுதந்திரமான தளமாக இருக்கிறது. தேவையில்லையெனில் அன்ஃபிரெண்ட் செய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. 
பெண்கள்
உளவியல் ரீதியாகப் பார்த்தால் பெண்கள் அங்கீகாரங்களை அதிகமாக எதிர்பார்ப்பார்கள். நிஜத்தில், அவர்களின் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதே யதார்த்தம். அந்தக் குறையை ஃபேஸ்புக் போக்கியிருக்கிறது. ஃபேஸ்புக் மூலமாகக் கிடைக்கும் லைக்ஸ், கமென்ட் அவர்களுக்கான அங்கீகாரமாக உணரச் செய்கிறது. மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது. அதற்காக சில பெண்கள்  பல மணி நேரங்கள் ஃபேஸ்புக்கிலேயே இருக்கிறார்கள். அதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஃபேஸ்புக்கால், விரும்பத்தகாத சில விஷயங்கள் நடந்தாலும் பெண்களுக்கு ஒரு சிறந்த அவுட்லெட்டாக இது இருக்கிறது’’ என்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.