தேசிய கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட்ட விவகாரம் பீரிஸ் காட்டம்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தில் உயிர்நீத்த உறவுகளை அஞ்சலிப்பதற்காக அனைத்துப் பாடசாலைகளிலும் ஸ்ரீலங்கா தேசிய கொடியை அரைகம்பத்தில் பறக்கவிடுமாறு பணித்திருந்த வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரனின் செயற்பாட்டிற்கு எதிராக ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதற்கெதிராக எந்தவித செயற்பாடுகளையும் ஏன் எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வடமாகாண கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை உண்மையை கண்டறியும் அமைப்பின் இணைப்பாளரான சட்டத்தரணி பிரேமநாத் சீ தோலவத்த நேற்று வெள்ளிக்கிழமை பதிவு செய்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை முன்னிட்டு உயிர்நீத்த உறவுகளை அஞ்சலிப்பதற்காக வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் ஸ்ரீலங்கா தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு வடமாகாண கல்வியமைச்சர் பணிப்புரை விடுத்திருந்தார்.

வடமாகாண கல்வியமைச்சரின் இந்த பணிப்புரையானது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாக அமைந்திருப்பதாக முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, இறுதிப் போரில் ஸ்ரீலங்கா படையினரால் அப்பாவி மக்களும் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக கூறியிருந்தார்.

ஆயுததாரிகள் மட்டுமே பலியான போர் உலகில் எங்கேயும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இந்தக் கூற்று தென்னிலங்கை அரசியல் களத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.

அரச தரப்பிலிருந்தும், எதிர்கட்சியினர் மற்றும் அமைப்புக்களில் இருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும், ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டார்.

வடமாகாண ஆளுநர் என்ன செய்கிறார். வடமாகாணத்தில் பாடசாலைகளில் தேசிய கொடியை அரைகம்பத்தில் பறக்கவிடுதல், மாணவர்களையும் அஞ்சலி நிகழ்வுகளில் ஈடுபடுத்துதல் மற்றும் விடுதலைப் புலிகளால் பயன்படுத்திய பொருட்களை அருங்காட்சியகத்தில் வைத்து வடமாகாண மக்களுக்காக பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்றன வடமாகாண கல்வியமைச்சரினால் கூறப்படுகையில் வடமாகாண ஆளுநர் என்ன செய்கிறார்? அவர் அரசாங்கத்தின் பிரதிநிதி.

இந்த அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்கியிருந்தும் அதில் பிரயோசனம் என்ன? அவற்றை பயன்படுத்தாமல் இருந்து எமது நாட்டின் இறைமையை சேதப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடங்கொடுத்தால் என்ன அர்த்தம்? இந்த சூழ்நிலையில்தான் அரசியலமைப்பு திருத்தம் பற்றி பேசுகிறார்கள்.

இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்துவதில்லை. இப்போது நிறைவேற்று அதிகாரத்தை நீக்கச் சொல்கிறார்கள். மத்திய அரசாங்கத்திடம் இருந்து எடுத்து அனைத்து அதிகாரத்தையும் ஆளுநரையும் முதலமைச்சரன் அதிகாரத்திற்குள் கொண்டுவரும்படி கூறுகிறார்கள்.

இப்படி நிலை இருந்தால் வடமாகாண சபை வேறு பயணத்தில்தான் செல்லும். மத்திய அரசுக்கு இதில் தலையிடுவதற்கான சிறு அதிகாரத்தையும் இல்லாதொழிக்கும் யோசனைதான் தயாரிக்கப்படுகிறது. இதுவே நாட்டின் அழிவு. மக்கள் இதுகுறித்து அவதானத்தை செலுத்தவேண்டும்.

மேலும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறும் அறிவிப்புக்கள் அவரது தனிப்பட்ட கருத்து என்று அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

அமைச்சரவை பேச்சாளரது கருத்து தனிப்பட்டது எனக்கூறும் சந்தர்ப்பம் எந்த நாட்டில் இருக்கிறது? அமைச்சரவை பேச்சாளர் என்பது அரசின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பவர்.

நாட்டின் ஐக்கியத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் நேரடி சவாலை விடுத்தனர். ஆனால் ஜே.வி.பியினர் அப்படி செய்யவில்லை. அமைச்சரவை பேச்சாளர் மிகுந்த யோசனையுடன் அரசின் கொள்கையை மக்களுக்கு கூறவேண்டும் ஆனால் தனிப்பட்ட கருத்துக்களை கூறமுடியாது.என மேலும் தெரிவித்தாா்.

Powered by Blogger.