விளையாட்டரங்கு து.ரவிகரனால் திறந்துவைப்பு!

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் முத்தையா என்ற பெயர்
பொறிக்கப்பட்ட விளையாட்டு அரங்கு ஒன்று இன்று காலை பத்து மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

இவ்விளையாட்டு அரங்கின் திரைச்சீலையை முன்னைநாள் பாடசாலை முதல்வர் திருவாளர் மு.முத்தையா அவர்களே திறந்து வைத்தார்.

பதினெட்டு இலட்சம் உரூபாய் செலவில் கட்டப்பட்ட இவ்விளையாட்டு அரங்கு மற்றும் விளையாட்டு உபகரண களஞ்சிய அறை என்பவற்றுக்கான கட்டுமானச்செலவானது வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்  2017, 2018ஆம் ஆண்டுகளின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

பாடசாலையின் முதல்வர் ஞானமூர்த்தி செபநேசன்  தலைமையில் நடைபெற்ற மு.முத்தையா விளையாட்டு அரங்கு திறப்புவிழாவானது விருந்தினர் வரவேற்புடன் தொடங்கியது.

விருந்தினர்கள் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், மாணவர்களின் மேலைத்தேய இசைக்கருவிகளின் அணிவகுப்புடன் நிகழ்வு இடம்பெறும் விளையாட்டு அரங்கிற்கு விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.

தொடர்ந்து கொடியேற்றல், மங்கல விளக்கேற்றல் எனத் தொடர்ந்து விளையாட்டரங்கு திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்திருந்த வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன்  கல்வெட்டை திரை நீக்கம்செய்து அரங்கை திறந்து வைத்ததுடன்.

பாடசாலையின் முன்னாள் முதல்வர் மு.முத்தையா  அரங்கின் பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்தார். தொடர்ந்து முல்லைத்தீவு கல்வி வலய பணிப்பாளர் திருமதி உமாநிதி புவனராசா  விளையாட்டு உபகரணக் களஞ்சிய அறையினைத் திறந்துவைத்தார்.

தொடர்ச்சியாக, பாடசாலை அணியினரின் ஒழுங்கமைப்பில் மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்த வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன்  கருத்துரையாற்றுகையில்,

பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் கல்வியில் மட்டுமன்றி இணைபாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கவேண்டும். மாணவர்களுடைய செயற்பாடுகள் ஒவ்வொன்றும் திறம்பட அமைவதற்கு பாடசாலையின் உட்கட்டமைப்பு மிகவும் தேவையானதொன்றாகும். விளையாட்டு அரங்கு ஒன்று பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் தேவையானது.

எனவேதான் இங்கே விளையாட்டரங்கு இல்லாத குறையை தீர்க்கவேண்டும் என்ற நோக்கில் அதனை அமைப்பதற்கு முன்வந்தேன். பாடசாலையின் கடந்த காலங்களையும், கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களையும் மறந்துவிடலாகாது.

கடந்தகாலங்கள் நினைவுகூரப்படவேண்டியவை. கடந்தகாலங்களில் பணியாற்றியவர்கள் வாழும்போதே மதிப்பளிக்கப்படவேண்டியவர்கள். எனவேதான் முன்னைநாள் முதல்வரின் பெயர் இந்த அரங்கிற்கு சூட்டப்பட்டுள்ளது என்றார்.

மேலும் இந் நிகழ்வின் விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன்  மற்றும் பாடசாலையின் முன்னாள் முதல்வர் திரு.மு.முத்தையா , கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்  மரியநாயகம் தொம்மைப்பிள்ளை ,

முல்லை கல்வி வலய கல்விப்பணிப்பாளர் திருமதி உமாநிதி புவனராசா  கலந்து கொண்டதுடன் மேலும் இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர். 
Powered by Blogger.