ரசிகர்களுக்காக நேரத்தை மாற்றிய ஐபிஎல் நிர்வாகம்!

ஐபிஎல் 11வது சீசன் கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த மாதம் 27ம் தேதியுடன் ஐபிஎல் நிறைவடைகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் ஐபிஎல் தொடரில் ஆடிவருகின்றன.
இவற்றில் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு அணியுடன் இரண்டு முறை மோதிக்கொள்ளும். அவற்றில் ஒரு போட்டி ஒவ்வொரு அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறும். மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறும்.
முதல் 4 இடத்தை பிடித்துள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்காக இரண்டு தகுதி சுற்று போட்டிகள் நடைபெறும். புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள், முதல் தகுதி சுற்று போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் மோதும். இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். இதில் வெற்றி பெறும் அணிக்கும், முதல் தகுதி சுற்றில் தோல்வியடைந்த அணிக்கும் இடையே இரண்டாவது தகுதி சுற்று போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணி இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
லீக் போட்டிக்கு பிறகு இறுதி போட்டிக்கு முன்னதாக, இரண்டு தகுதி சுற்று மற்றும் ஒரு எலிமினேட்டர் போட்டி என மூன்று நாக் அவுட் போட்டிகள் நடைபெறும். இந்த மூன்று நாக் அவுட் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி ஆகியவற்றின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகின்றன. ஆனால் நாக் அவுட் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி ஆகிய 4 போட்டிகளும் 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்கும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் 8 மணிக்கு தொடங்குவதால், முடிவடைய இரவு 11.30 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. அதனால் ஐபிஎல் ரசிகர்கள், இரவு தாமதமாக தூங்க செல்லும் நிலை உள்ளது. அதனால் ரசிகர்களின் நலன் கருதி பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகள் 8 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் முன்னதாக 7 மணிக்கு தொடங்கப்படும் என ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
புனேவில் நடக்க இருந்த பிளே ஆஃப் போட்டிகள், அண்மையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
Powered by Blogger.