யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த குருக்கள்!

அரசியல் தலையீடுகளோ அல்லது வேறு எவ்விதமான தலையீடுகளோ அல்லாமல் வெள்ளம் உள்ளம் படைத்த மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு நாமனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ். சாவகச்சேரி வடக்கு ஆதீஸ்வர் வீரபத்திரர் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ பாலகுமாரக்குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை(08) முற்பகல்-11.45 மணி முதல் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் வைகாசி மாதம்-18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற கொலைகளுக்குப் பிராயச்சித்தம் தேடும் முகமாக நினைவுநாள் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்கமைப்பை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துச் செல்வது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

இந்த நிகழ்வை அனுஷ்டிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் எதுவிதமான இலாபகரமான நோக்கங்களும் காணப்படவில்லை. ஆகவே, இந்த நிகழ்வை அவர்கள் தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்பது எங்கள் அனைவருடையதும் விருப்பமாகவுள்ளது.

இதற்கென நாங்கள் எங்கள் பூரணமான ஆதரவை வழங்குகின்றோம்.

தனியே முள்ளிவாய்க்கால் மண்ணில் மாத்திரமன்றி எங்கெல்லாம் சைவத்தமிழ்மக்களின் வாழ்வு சின்னாபின்னமாக்கப்பட்டதோ அங்கெல்லாம் இந்த நினைவு நாள் நினைவு கூரப்பட வேண்டும்.
Powered by Blogger.