எம்.பி பதவி சலுகையினால் நிலம் கிடைக்கலாமென்ற எதிர்பார்ப்பில் முயற்சி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் காணிகள் சிங்களவர்களாலும், முஸ்லிம்களாலும் அபகரிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த நிலத்தின் பாரம்பரிய குடிகளான தமிழர்களில் பலர் இன்றும் குடியிருக்க சொந்த நிலமில்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணி கோரி விண்ணப்பம் செய்யப்பட்ட விபரங்களை ஆராய்ந்த போது, அதிர்ச்சியளிக்கும் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது,
செல்வாக்குள்ள தரப்புக்கள் நிலங்களை கையகப்படுத்த முயற்சிப்பது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சாந்தி சிறிஸ்கந்தராசாவும் ஒருவர் என்பதே அதிர்ச்சியளிக்கும் விடயம்..
முல்லைத்தீவு மாவட்ட எம்.பியாக நியமனம் பெற்றதும் சாந்தி சிறிஸ்கந்தராசா செய்த வேலை, தனது மகனான கபிஸ் என்பவரின் பெயரில் “பண்ணை ஆரம்பிக்க பத்து ஏக்கர் நிலம் வழங்குமாறு” முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்தார்.
அத்துடன், அரச அதிபரை தொடர்பு கொண்டு, “காணியை தனக்கு ஒதுக்கி தருமாறும்” கேட்டுள்ளார்.
அவர் அடையாளப்படுத்தியுள்ள காணி, துணுக்காய் கரும்புள்ளியானில் பாலியாற்றங்கரையில் அமைந்துள்ளது.
அவரது மகன் சிறிஸ்கந்தராசா கபிஸ் பெயரில் அந்த பத்து ஏக்கர் காணியை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கோரியுள்ளார்.
இதுதவிர, முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு படையென்ற இராணுவ நிர்வாகத்திற்காக பண்ணை அமைக்க கோரப்பட்டுள்ள காணியின் மொத்த அளவு 527.25 ஏக்கர்.
உயர்பாதுகாப்பு வலயம், படையினரால் சுவீகரிக்க திட்டமிடப்பட்டுள்ள காணிகளிற்குள் அடங்காது.
அத்துடன், குருணாகலை சேர்ந்த அஜந்த பெரேரா என்ற சிங்களவரும் பண்ணை அமைக்க முல்லைத்தீவில் காணி கோரியிருக்கிறார்.
இந்த விடயங்கள் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, யாருக்கும் நிலம் வழங்குவதில்லையென எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இவர்கள் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை.
மாவட்ட செயலகத்தில் விண்ணப்பித்து நிலத்தை பெறுவது சட்டவழிமுறைதான்.
ஆனால் அவரது எம்.பி பதவிகாலத்தில் இந்த நிலத்தை பெற முனைந்தது, அவரது எம்.பி பதவி சலுகையினால் நிலம் கிடைக்கலாமென்ற எதிர்பார்ப்பில் அமைந்திருக்கலாம்.
மக்கள் நிலமின்றி தவித்து வரும் நிலையில், அந்த மக்களின் பிரதிநிதிகள் இப்படி செய்வது “அரசியல் அறமா?” என்பதே இப்போதைய கேள்வி.

Powered by Blogger.