ஏழை அழுத கண்ணீர்.ஏழை என் உழைப்பை(த்)
தின்ற பூதங்கள்
மேடையில் இருந்து
கோரப் பற்களையும்
குட்டைக் கழுத்துகளையும்
குலுக்கி குலுக்கி
அசைத்து ஆட்டி
கெக்கட்டமிட்டுச் சிரித்தன.
வேலை நிமித்தம் போன
எனைப் பார்த்து.

நல்லூரடியான் வீதியை
நொந்த மனதுடன் கடந்தேன்.
முப்புரம் எரித்தவனின் புதல்வன்
என் முகாரியைப் படித்துவிட்டான்.
எனக்காய் அற்புதம் தந்தானடா
சனியை சட்டேன அனுப்பி வைத்து
நாவால் நாறிப் போக வைத்தான்.
பூதங்களின் கெக்கலிப்பையும்
மயக்கத்தையும்......
அடக்கி என்னை மகிழ வைத்தான்.
நான்முகனுக்கே நடுமண்டை கிழிய
குட்டிக் குதறியவனடா என் கந்தன்.
அவன் என் காதல் கடவுளடா.

அட...
ஏழையின் ரத்தத்திலே
ஏற்றிய கொடிகள்
காற்றில் அசைவதையும்
கடவுள் கண்ணோக்கிப் பார்ப்பாரடா.
உன் ஏளனச் சிரிப்பினை நீ
ஏழை வயிற்றிலே எரியவைத்தாய்.
ஏழையின் கண்ணீரடா அது
எரிமலையை நிகர்த்ததடா.

கேவலப் பிறவிகளே...!
அன்றொரு நாள் எந்தன்
ஏழை வாசலைத் தட்டி வந்தபோது
உந்த ஏளனம் மறைத்ததேனோ?

பிச்சை எடுப்பது தவறல்ல மானிடா...
பிச்சைக்காரனிடம் பிச்சை எடுத்து
பெருமையாய் உன்னையே
பீத்திக் கொண்டாயே
அது தானடா கேவலம் முட்டாளே..!

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija


No comments

Powered by Blogger.