தூத்துக்குடி அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாக யேர்மனியில் கவனயீர்ப்பு!

தூத்துக்குடி மக்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து
28.05.2018 தினம் யேர்மனியில் நடைபெற்ற அடையாள கவனயீர்ப்பு நிகழ்வுகள். தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள்,  100 க்கும் மேலான நாட்களாக  போராட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக ரீதியிலான ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுள்ள வேளையில்  காவல்துறையினர் சரமாரியாக மக்கள் கூட்டத்தை நோக்கிச் சுட்டதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இப்படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடி மக்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்றைய தினம் யேர்மனியில் பேர்லின் தலைநகரத்திலும் பிராங்பேர்ட் மாநகரத்தில் இந்திய தூதரகத்துக்கு முன்பாக தமிழ் மக்களால் அடையாள கண்டன கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.

இவ் நிகழ்வுகளில் தூத்துக்குடி கொடூர படுகொலையை கண்டித்து கோசங்கள் எழுப்பியதோடு, பதாதைகளை  தாங்கியவாறு மக்கள் ஈடுபட்டனர். இறுதியில் இந்திய தூதரகத்துக்கு மனு கையளிக்கப்பட்டு கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவுற்றது. பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்ட மக்களை பயமுறுத்தும் வகையில் இந்திய தூதரகத்தால் நிழற்படங்கள் எடுக்கப்பட்டது.  

 தூத்துக்குடி மக்களின் படுகொலையை கண்டித்து உலகளாவிய ரீதியில் நடைபெற்ற போராட்டங்களால் நேற்றைய தினம் ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக மூடுவதற்க்கு அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.