யாழ்.பல்கலை மாணவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கிறது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்புவிடுத்திருந்தார். எனினும் முதலமைச்சரின் அழைப்பை ஏற்பதில்லை எனவும் கலந்துரையாடலில் பங்கேற்பதில்லை எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்தது.

அவர்களின் இந்தச் செயற்பாடு தொடர்பில் கருத்துவெளியிட்ட போதே வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் துரதிஷ்டவசமாக இன்றைய கலந்துரையாடலுக்கு வராமல்விட்டுவிட்டார். இது எங்களுக்கு மிகவும் மன வருத்தத்தைத் தருகின்றது. மாணவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

பல்கலைக்கழகத்துக்கு ஊடாக வந்தவர்கள்தான் நாங்களும். ஆகவே அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல.

ஏதோ சில பிழையான கருத்துக்கள் அவர்களை ஆட்டிப்படைப்பதாக நான் காண்கின்றேன். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தும் எண்ணம் அவர்களுக்கு இருக்கின்றது என்றால், முதன்முதலில் எம்முடன் வந்து கலந்தாலோசித்திருக்கலாம். 2-3 மாதங்களுக்கு முன்னர் வந்து, “இவ்வாறு நாம் செய்ய இருக்கின்றோம். எங்களுக்கு செய்வதற்கு பிரியமாகவிருக்கின்றது” எனக் கூறியிருக்கலாம். எங்களுடைய உறுப்பினர்களையும் சேர்த்து அவர்களுடன் பேசி, நாங்கள் அதனைக் கொண்டு நடத்தியிருக்கலாம்.

“நாங்கள் செய்யப்போகின்றோம் எல்லோரும் வந்து சேருங்கள்” என்று அவர்கள் கூறியது வருத்தப்படவேண்டிய செயல். ஏனெனில் ஒவ்வொருவரும் வந்து சொல்லலாம், நாங்கள் செய்கின்றோம் நீங்கள் வந்து சேருங்கள் என்று.

உத்தியோகபூர்வமாகத்தான் நாம் இந்த விடயத்தில் உள்நுழைந்துள்ளோம். 3 வருடங்களாக செய்து வந்துள்ளோம் அதனை முன்னெடுக்கும் காணி எமது அமைச்சின் கீழ் வருகின்றது. மாகாணத்தின் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையில் எமக்கு அந்த உரித்து இருக்கின்றது. ஆகவே நாங்கள் உத்தியோகபூர்வமாக எமது கடமைகளைச் செய்துகொண்டிருக்கின்றோம்.

எனவே இதில் ஏதாவது திருத்தங்கள் செய்யவேண்டுமாயின் பல்கலைக்கழக மாணவர்கள் எம்முடன் வந்து பேசியிருக்கவேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாதது எமக்கு மன வருத்தமாக உள்ளது என்றார்.
Powered by Blogger.