தேசிய கணக்காய்வு சட்டமூலம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு!

தேசிய கணக்காய்வு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது இல்லையென உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, தேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணாக அமையவில்லையெனக் கூறினார்.

 நீண்டகாலமாக இழுபட்டுவரும் தேசிய கணக்காய்வு சட்டமூலம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

முதலாவது வாசிப்புக்காக கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இந்தச் சட்டமூலம் அதிகாரமளிக்கும்.

தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் இலங்கை அரச கணக்காய்வு சேவை அலுவலகம் ஆகியவற்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் இது கொண்டுள்ளது.

கணக்காய்வு சட்டமூலத்துக்கான தேவை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருவதுடன், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குறித்த சட்டமூலத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் உச்சநீதிமன்றம் சென்றனர்.

இந்த முறைப்பாடுகளை விசாரித்த உச்சநீதிமன்றம், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது இல்லையென அறிவித்துள்ளது.

அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தலைமையிலான அமைச்சரவை உபகுழு முன்மொழிந்த திருத்தங்களுடன் கணக்காய்வு சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்களை அரசாங்கம், குழுநிலையில் முன்வைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.