கூட்டமைப்பு முயற்சியும் நாவிதன்வெளி பிரதேசமும்!

மத்திய முகாம் பகுதியை நாவிதன்வெளி பிரதேசத்தில் கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றியமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

படர்கல் பத்தினியம்மன் ஆலய வரவேற்பு கோபுர திறப்பு விழா நாவிதன்வெளி மத்திய முகாம் பகுதியில் ஆலய தலைவர் மார்கண்டு தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கிலங்கையின் தமிழர்களின் எல்லைகளை அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்தமைக்கு பலமான தொன்மையை எடுத்தியம்பும் ஆலயங்களின் கோபுரங்கள் மிளிராமையே காரணமாகும்.

தமிழர்கள் மாற்று சமூகத்தை ஒப்பிடுகையில் அனைத்து விடயத்திலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாவிதன்வெளி பிரதேசத்தில் 2006ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் பிரதேசத்தில் அபிவிருத்தியும், கொங்றீட், தார் வீதிகளும் அமைக்கப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே.

நாம் இன்னும் எமது பிரதேசத்தினை வளர்ச்சியடைய செய்ய வேண்டுமாக இருந்தால் எமது பிரதேச செயலகத்தின் செயலாளருடனும், அங்குள்ள நிர்வாகிகளுடனும் ஒத்தியங்கி வழங்களை திறன்பட மக்களுக்கு பயனுறும் வகையில் வழிசமைக்க ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.
மத்தியமுகாம் பகுதியை நாவிதன்வெளி பிரதேசத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

அதனை மிகவிரைவில் செயற்படுத்துவதற்கு சகலவிதமான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது. இந்த செயற்பாடுகள் அனைத்தும் எமது மக்களின் நலன்சார்ந்ததாகவே அமையும்.

இந்த ஆலயம் தொன்மைமிக்க சின்னமாக இப்பிரதேசத்தில் இருந்து வருகின்றது. அதனை மேலும் மெருகூட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் இரண்டரை இலட்சம் ரூபாயினை ஒதுக்கினார்.

இடையிலே தடைபட்டு கிடந்த வரவேற்பு கோபுரவாசலின் பணிக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினராக தான் இருந்த காலகட்டத்தில் ஒரு மில்லியன் ரூபாவினை ஒதுக்கி அதனை சிறப்புற நிர்மாணிக்க உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.


மேலும், நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் தவராசா கலையரசன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், சனசமூக நிலைய உறுப்பினர்கள், பல்கலைகழக மாணவர் ஒண்றியத்தினர், விளையாட்டு கழக உறுப்பினர்கள் ஆலய குருமார் தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.