பெற்றோர்களை தவிக்க விடும் நீட் தேர்வு அவசியமா?கனிமொழி.!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி மேலத்தெருவை சேர்ந்த நூலகர் கிருஷ்ணசாமியின் (வயது 47) மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு, நீட் தேர்வு எழுத  எர்ணாகுளம் தம்மணம் பகுதியில் உள்ள நாலந்தா பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் கடந்த 4-ந் தேதி காரைக்கால்-எர்ணா குளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருவாரூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு எர்ணாகுளம் வடக்கு ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில், மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுத நேற்று சென்றிருந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமி  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கிருஷ்ணசாமி இறந்த தகவல், பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டு இருந்த அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு தெரியாது. தந்தை இறந்தது தெரியாமலேயே அவர் தேர்வை எழுதிக் கொண்டு இருந்தார்.

இந்த தகவல் அறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மாணவனின் தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கேரள அரசின் தலைமை செயலாளருடன் தொடர்பு கொண்டு பேசினார்.

மதியம் 1 மணிக்கு நீட் தேர்வு முடிந்த பிறகுதான், கிருஷ்ணசாமி இறந்தது பற்றி அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தேர்வு முடிந்ததும் போலீசார் நேராக நாலந்தா பப்ளிக் பள்ளி தேர்வு மையத்துக்கு சென்று, கிருஷ்ணசாமி இறந்தது பற்றி கஸ்தூரி மகாலிங்கத்திடம் கூறி, அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தனது தந்தையின் உடலை பார்த்து கஸ்தூரி மகாலிங்கம் கண்ணீர் விட்டு அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

பிரேத பரிசோதனைக்கு பிறகு கிருஷ்ணசாமியின் உடலை எர்ணாகுளத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. கிருஷ்ணசாமியின் உடல் ஏற்றப்பட்ட ஆம்புலன்ஸ் மாலை 4.30 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டது. கிருஷ்ணசாமியின் உடல் திருத்துறைப்பூண்டி, விளக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று இரவு சுமார் 2 மணியளவில் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது முகத்தை காண அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சோகத்துடன் காத்திருந்தனர். அவர்கள் கிருஷ்ணசாமியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

கிருஷ்ணசாமியின் உடலுக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை கனிமொழி எம்.பி, கிருஷ்ணசாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். கிருஷ்ணசாமியின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கனிமொழி எம்.பி, “மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தவிக்க விடும் நீட் தேர்வு அவசியமா என அரசு சிந்திக்க வேண்டும். கிருஷ்ணசாமியின் பிள்ளைகளுக்கு அரசு என்ன பதில் சொல்லும்?. சரியான உடை எது என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.