பின்வாசல் வழியாக காங். ஆட்சி அமைக்க முயல்கிறது!

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு உரிமை இல்லை என்றும் மாற்றத்துக்காகவே மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளதாகவும், காங்கிரசார் பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க முயன்று வருவதாகவும் எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்த பாஜகவின் தற்போதைய நிலவரம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க 6 இடங்கள் தேவை என்பதால் கர்நாடகாவில் அரசியல் ஆட்டங்கள் களைகட்டும் சூட்ழநிலை உருவாகி உள்ளது. 120 இடங்களில் முன்னிலையில் இருந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்திருந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கை குறைந்தது. 
பாஜக ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கை கோர்த்தால் 114 இடங்களில் முன்னிலை என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரன் அறிவித்துள்ளார். இது குறித்து ஆளுநரை சந்திக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், கர்நாடக பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளரான எடியூரப்பா, பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு தார்மீக உரிமை இல்லை. 
சித்தராமையாவை மக்கள் புறக்கணித்து விட்டார்கள் என்றார். அவரது சொந்த தொகுதியான சாமூண்டீஸ்வரியிலேயே தோல்வி அடைந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கக் கூடாது என்றே மக்கள் வாக்களித்து உள்ளனர். மாற்றத்துக்காகவே கர்நாடக மக்கள் வாக்களித்ததாகவும் அவர் கூறினார். தனிப்பெரும் கட்சியாக பாஜகவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் எங்களுக்குத்தான் ஆதரவளித்துள்ளனர். 
தற்போது காங்கிரசார் பின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க முயன்று வருகின்றனர். பாஜக தேசிய தலைவரிடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கர்நாடகாவுக்கு வருகை தர உள்ளனர்.
Powered by Blogger.