மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வௌியேற்றம்!

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வௌியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக நேற்றைய தினம் 8 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்துள்ளார்.
அதிக மழையுடனான வானிலை காரணமாக ஹப்புத்தளை, தம்பேதென்ன மற்றும் மவுசாகலை பகுதிகளைச் சேர்ந்த 64 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
 அதிக மழை காரணமாக திறக்கப்பட்ட உடவளவ நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகாரசபையின் உதவி பணிப்பாளர் பூஜித குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை மழையுடனான வானிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பிலான ஆய்விற்கிணங்க மண்சரிவு அபாயம் நிலவும் 10 மாவட்டங்களுக்காக விசேட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
குறித்த குழுவில் 35 பேர் அடங்குவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் சிரேஷ்ட புவியியலாளர் எச்.எல்.எம். இந்திரதிலக தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் உள்ளடங்கும் வகையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.