இராணுவத்திடம் தண்ணீர் கேட்டு அழுதோம்..!

தோட்டாக்களின் சத்தம் எறிகணைகளின் சத்தம் என்று வானைப்பிளந்தபடி
இருந்தது.எந்தநேரமும் இந்த சத்தங்களை கேட்டுக்கொண்டிருந்தபடியால் காதும் அடைத்துப்போய்விட்டது.இறுதி நாள் என்ன முடிவு எடுப்பது என்றே தெரியாத நிலையில் அனைவரும் தவித்துப்போய் நின்றோம்

அதிகாலை பொழுது என்றபடியால் நிலம் வெளிக்காமல் இருந்தது.இரவு முழுவதும் நித்திரையை தொலைத்து ஏக்கத்தோடு காத்திருந்தோம் விடியும் பொழுதிற்காக

எமக்கான முடிவை இயற்கை தேடித்தந்தது,ஆம் வீதியில் நின்ற ஒரு வாகனத்தின் மீது செல் ஒன்று விழுந்தது,அந்த வாகனமும் வெடிமருந்துகளுடன் நின்றபடியால் எல்லாமே வெடித்துச்சிதற தொடங்கியது,

எரிமலை வெடித்து தீப்பிளம்பு கக்குவதுபோல தீயின் வெளிச்சம் வானைப்பிளந்தது,இறுதியக வட்டுவாகல் ஒளிமயமாக எங்கும் காட்ச்சி தந்தது.

தீயின் சுவாலைகள் கொழுந்துவிட்டு எரிந்தது,தீ நம்மை துரத்தத்தொடங்கியது.செல் விழுந்ததற்கு முன்பகுதியில் இருந்த மக்கள் முன்னோக்கி அவலக்குரல்களை எழுப்பியவாறு தம் உறவுகளை கூப்பிட்டவாறு ஓடத்தொடங்கினார்கள்,

நாம் ஓடிக்கொண்டிருக்கும்போதே தெரிந்துகொண்டோம் நாம் இராணுவத்தின் பகுதிக்குள் வந்துவிட்டோம் என்று,தீப்பிளம்பு எம்மை இராணுவத்தினரிடம் ஒப்படைத்துச்சென்றது,இராணுவத்திடம் வந்துவிட்டோம்.இனி என்ன நடக்கப்போகுதோ என்ற ஏக்கம் பயம் தொற்றிக்கொண்டது

நாங்கள் நடக்கவில்லை தள்ளுப்பட்டே சென்றுகொண்டிருந்தோம்,இரண்டு கால்களிலும் காயப்பட்ட போராளி ஒருவன் இரண்டு கைகளின் விரல்களிற்கும் இடையில் செருப்பினைக்கொழுவி தனது வக்பகுதியால் உண்ணி வந்துகொண்டிருந்தான்,

இன்னொரு நேரமாக இருந்திருந்தால் ஓடிச்சென்று என் தம்பியை தாங்கியிருப்பேன்,என் நிலை அப்படி இருக்கவில்லை.நானே இன்னொருவரின் துணையுடன் வந்துகொண்டிருந்தேன்.

அவனிற்கு உதவமுடியவில்லை என்ற ஏக்கத்தோடு முன்னோக்கி சென்றுகொண்டிருந்தோம்,முதல்நாட்கள் அளவில் இராணுவ பகுதிக்குள் வந்தவர்கள் செல்பட்டு இறந்துகிடந்தார்கள்.உப்புக்காற்றிற்கு உடல் பருத்துக்கிடந்தது.விலத்தி விலத்தி நடந்து பாலத்தை அடைந்துவிட்டோம்,

பாலத்தின் இருபக்கங்களிலும் கற்பாறைகள் எங்கும் எம் மக்களின் உடல்கள் மிதந்தது.சிறுவர்கள் பெண்கள் உடல்களே அதிகம் தோல் எல்லாம் வெளுத்து வெள்ளையாக உடல்கள் குப்புறமிதந்தபடி இருந்தது.எம் மக்கள் உயிரை காப்பதற்கு ஓடிவந்து இறுபகுதியில் மரணித்திருந்தார்கள்

எல்லாவற்றையும் தாண்டி நான்கு பக்கமும் சுற்றி போடப்பட்ட இராணுவத்தின் முற்கம்பி வேலிக்குள் சென்றுவிட்டோம்,பல்லாயிரக்கணக்கான மக்கள் முற்கம்பிக்குள் தஞ்சமடைந்தோம்,

பசியில் தண்ணீர்தாகத்தில் சிறுவர்கள் வயோதிபர்கள் என்று வாய்விட்டு அழுதார்கள், இராணுவத்தினரால் வாகனம் ஒன்றில் கொண்டுவந்து விஸ்கற் சிறிய தண்ணீர் போத்தல் மக்களை நோக்கி எறியப்பட்டது,மேல் படத்தில் காட்டியத்ப்போல் எல்லோரும் கைகளை நீட்டினோம்,

ஒரு சிலரிற்கே கிடைத்தது,என்ன செய்வது அப்படியே வெய்யிலுக்காக முகத்திற்கு துணியைப்போட்டுவிட்டு வெட்டவெளியில் படுத்துவிட்டோம்,மூன்று நாட்கள் கம்பிக்குள் இருந்தோம்,

இன்றைய நாளில் எல்லாம் நாங்கள் முற்கம்பி வேலிக்குள்ளேயே இருந்தோம்,

மூன்றாம்நாள் சிறுசிறு தொகையாக  பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட கூட்டிற்குள் சென்று உடமைகள் உடல்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டது,ஆம்  துகிலுரியப்பட்டு சோதனைசெய்யப்பட்டோம்,

வெட்கப்பட்டோம் அவமானப்பட்டோம் என்ன செய்வது எம்நிலையில் என்ன செய்யமுடியும், வாகனத்தில் ஏற்றப்பட்டோம் எங்கு போகிறோம் என்று தெரியாமல்

வாகனத்திற்குள் வைத்து இரண்டு நாட்களின்பின் 20ரூபா விஸ்கற் சிறிய தண்ணீர் போத்தல் தந்தார்கள்.இரண்டு நாட்கள் முழுமையாக சாப்பிடாமல் இருந்தபடியால் வாங்கி சாப்பிட்டோம்.

எனது ஆசையெல்லாம் இந்த செல்சத்தம் கேட்காத தூரத்திற்கு சென்றுவிடவேண்டும் என்றே இருந்தது,செல்லிற்கு இறந்த மக்களைப்பார்த்துப்பார்த்தே செல் என்றாலே ஆள்விழுங்கி என்றானது.நாங்கள் வந்துவிட்டோம் ஆனால் வெடியோசைகள் கேட்டவண்ணமே இருந்தது,

வாகனங்களில் கொண்டுசெல்லப்பட்டு ஓமந்தையில் இறக்கப்பட்டோம்,அங்கு ஒலிபெருக்கியில் தமிழில் இராணுவத்தால் அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது,

ஆம் போராளியா இருந்தாலென்ன இயக்க நிறுவனங்களில் ஒரு நாள்வேலை செய்தாலும் வந்து பெயர் விபரங்கள் பதிந்துவிட்டு செல்லுங்கள் என்ற அறிவிப்பே அது.

பதியச்சென்றவர்கள் வேறுவழியாக வாகனங்களில் ஏற்றப்பட்டு முகாம்களிற்கு கொண்டுசெல்லப்பட்டார்கள்,பெற்றோர் இருவரும் பிள்ளைகளை இருக்கும்படி சொல்லிவிட்டு பதியச்சென்றபோது அவர்கள் முகாம்களிற்கு ஏற்றப்பட்டதால் பிள்ளைகள் தனித்துப்போன கதைகள் என்று பல அரங்கேறியது,

பொதுமக்கள் புறம்பாகவும் போராளிகள் புறம்பாகவும் வெவ்வேறு முகாம்களிற்கு கொண்டுசெல்லப்பட்டார்கள்,அண்ணளவாக ஒன்றரை வருடத்தில் இருந்து இரண்டு வருட முட்கம்பி வாழ்க்கை கிடைத்தது.

ஒரு உடையுடன் பல மாதவாழ்க்கை கழிந்தது.உண்ண உணவின்றி தூங்க வசதியின்றி நோய் நொடிகளோடு காயங்களிற்கு மருந்தின்றி பலதரப்பட்ட துன்பகரமான வாழ்க்கையை வாழ்ந்து முடித்தோம்,

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.