இசைப்பிரியாவின் குடும்பத்தினரின் அன்பான வேண்டுகோள்.!



ஈழத்தமிழர் நலனை முன்னெடுக்கும் அமைப்புகளுக்கு,
இசைப்பிரியாவின் குடும்பத்தினரின் அன்பான வேண்டுகோள்:
இசைப்பிரியாவின் குடும்பம் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆதரித்து வரும் குடும்பம். இறுதி யுத்த முடிவில் சிங்களவனுடன் வாழ முடியாமல் வெளிநாடுகளில் புகலிடம் கோரியுள்ளோம். இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறை ஒரு கர்நாடக இயக்குனர் சினிமாப்படம் ஆக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உண்மைக்கதையை உங்களால் படம் எடுக்க முடியாது எடுக்க வேண்டாம் என வலியுறுத்தினோம். ஆனால் அவர் அதனைப் பொருட்டாகவே மதிக்காமல் இந்தப் படத்தினை எடுத்து முடித்தார். 2014 ஏப்ரல் தொடக்கம் ட்ரெய்லர் வெளியீடு, பாடல் வெளியீடு போன்ற முயற்சிகள் கனடாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அவரால் எடுக்கப் பட்டபோது விடுதலைப் புலிப் போராளிகளினதும் தங்களைப் போன்ற அமைப்புக்களின் உதவியுடன் நிறுத்தப்பட்டன. இப்படத்தினை வெளியிடக் கூடாதென சென்னை உயர்நீதிமன்று மூலம் செப்ரெம்பர் 2016ல் தடையுத்தரவும் வாங்கியிருந்தும் ஒவ்வொரு ஆண்டிலும் ஐ.நா அமர்வுகள் நடக்கின்ற காலப்பகுதியிலோ, முள்ளிவாய்க்கால் நினைவுநாள், மாவீர ர்நாள் காலப்பகுதிகளிலோ கனடா அல்லது ஐரோப்பிய நாடுகளில் இப் படத்தினை வெளியிட முயற்சிகள் எடுகப்படுவதும் நாம் அதனைத் தடுப்பதும் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்கிறது. நாம் ஏற்கனவே நிறைய வலிகளோடு வாழ்கிறோம். திருப்பி திருப்பி எங்களை ரணமாக்கும் முயற்சிகள் இதற்குப், பாரதூரமான உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தை தருகிறது.
ஏனெனில் இசைப்பிரியாவோ எமது குடும்பத்தினரோ தேசியத் தலைவர் வழிநடத்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தவர்கள். நீங்களும் அவர் நடத்திய போராட்டத்தைப் பின்பற்றுபவர்கள். எமது மக்கள் தேசியத் தலைவர் வழிநடத்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்களாகவும் அதனைப் பின்பற்றுபவர்களாகவே உங்களை ஆதரிக்கிறார்கள். உங்களோடு தோள்கொடுக்கிறார்கள். 
எமது ஈழப்போரில் தலைவர் வழிநடத்திய காலப்பகுதியில் எங்கள் போராளிகளுக்கு இலங்கை இந்திய இராணுவங்களால் எத்தனையோ அவமானங்கள் நடாத்தப்பட்டன. அதனைச் செய்தவர்களைத் தண்டிக்க இயக்கம் எத்தகைய முடிவுகளை எடுத்ததென்பது இயக்கத்தை அறிந்த எம் எல்லோருக்கும் தெரியும். இயக்கத்தை உலகம் பயங்கரவாதிகள் என்ற போது கூட இயக்கம் அவ் அவமானங்களை உண்மைக்கதை எனத் திரைப்படம் எடுத்து உலகுக்கு காட்ட முன்வரவில்லை என்பதை நான் நினைவுபடுத்துகிறேன்.
இசைப்பிரியாவின் மரணம் போர்க்குற்ற மீறலென ஐ.நாவில் போதிய ஆதரங்களுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவரொரு ஊடகப் போராளி எனக் காட்டப்பட்டது. குடும்பம் எந்த மறுப்பும் சொல்லவில்லை. Channel 4ல் கூட நாம் அதற்குச் சாதகமான வாக்குமூலத்தை எமது முகங்களை காட்டிச் சொல்லியுள்ளோம். ஆனால் திரைப்படம் என்பது வேறு. இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு என்பது - channel 4 ஆதாரங்களை நடுவில போட்டிட்டு முன்னுக்கும் பின்னுக்கும் கற்பனை பண்ணி எழுதக்கூடியதல்ல. எங்கள் தங்கையை அவமானப்படுதுவதைக் காட்சிகளாக்கி ஒரு திரைப்படம் வெளியாக கடைசி வரை அனுமதிக்க முடியாது. அவளை இயக்கத்தின் சொத்து என்கிறார்கள். ஆம் அவள் தலைவர் பிரபாகரன் வழிநடத்திய இயக்கத்தின் சொத்து வன்னியில் அவளோடு இணைந்து போராடிய ஒரு புலிவீர ராவது அவர்களது சகபோராளிக்கு நடந்த அவமானத்தை படமாக்கி வெளியிடத்தான் வேண்டுமென்று சொல்லட்டும் உண்மையில் இசைப்பிரியா யார் என்று உண்மையை அந்தப்படத்தில் காட்டப்பட ட்டும். அந்தப் படத்தை நாம் நிறுத்தச் சொல்லமாட்டோம். அப்படியொரு படத்தை எடுக்க முடியாதென்பது எங்கள் எல்லாருக்கும் தெரியும். எங்கள் வலி விடுதலைப் போராட்டத்தை மனதார நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் விளங்கவேண்டும் என்று நாம் நினைப்பது தவறா??
இந்தப் படம் வெளியிட வேண்டாம் என்று நாம் கேட்பதால், எம்மை சிங்கள உளவுத்துறை என்கிறார்கள், இந்தியப் புலனாய்வென்கிறார்கள். ஆனால் நான்காண்டுங்களாக திரும்பத் திரும்ப இந்தப் படத்தைக் கொண்டு உலகம் பூராகத் திரிய ஒரு கர்நாடக கார ருக்கு துணிவு இருக்காது. அவரை யாரோ பின்னின்று நகர்த்துகிறார்களோ என்று நாம் ஏன் சிந்திக்க கூடாது. அந்தப் படம் வெளியாவதைத் தடுப்பவர்கள் நிச்சயம் விடுதலைப்புலிகளின் தீவீர பங்களிப்பாளர்களாகத் தான் இருப்பார்கள். அவர்களின் விபரங்கள் ஒவ்வொரு தடவையும் வெளியில வருகிறது;எமது வாயால் இசைப்பிரியா உண்மையில் யார் என்பது எங்காவது எமது வாயாலோ வேறு போராளிகளின் வாயாலோ உணர்ச்சிவசப்பட்டு வெளியில வரலாம்; அமைப்புக்களுக்கிடையிலும் அல்லது எமக்கும் அமைப்புக்களுக்கிடையிலும் புரிந்துணர்வற்ற முரண்பாடுகளைத் தோற்றுவிக்கலாம். இசைப்பிரியாவின் கணவர் தளபதி ஶ்ரீராம் எங்கே என்பது இன்று வரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனது கணவர் ஒரு புலனாய்வுத்துறை மாவீர ர். தடை செய்யப்பட்ட படத்தைப் பயன்படுத்தி ஏன் எமது விபரங்களை எமக்கு உதவுவோர் விபரங்களை யாரோ சேகரிக்க முற்படக்கூடாது. இதற்குச் சான்றாக, அதிர்வுக் கண்ணண் ஒரு ஈழ உணர்வாளனாகி - இசைப்பிரியா குடும்பத்தை தேசத்துரோகிகள் என்னும் பிரச்சாரத்தை லண்டனில் செய்கிறான். நாடு கடந்த தமிழீழ அரசு நீதிராஜ் அவர்கள் படவெளியீட்டுக்கு முனைப்பாக உழைக்கிறார் என்று கண்ணண் சொல்கிறான். மிகவும் கீழ்த்தரமான இணையதளமான அதிர்வு இணையதளத்தில் உலகம் பூராகவும் நடைபெற்ற நடுபக்கச் செய்திகளே முகப்பில் இருக்கும். அந்தக் கண்ணண் இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதும் வெளியிடப் போவதும் எம்மைக் குனிக் குறுக வைக்கிறது. நாம் இந்த விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது அத்தகையதொரு குற்றமா. சிங்களவன் என் தங்கையை ஒரு தரம் கொன்றான். தமிழர்கள் சிலர் அதை தம் கற்பனைக்குள் உள்வாங்கி ஒளிவடிவமாக்கி சந்ததி சந்ததியாக காட்ட நினைக்கிறார்களே, தடுக்க மாட்டீர்கஆ? எனது தங்கையின் செல்லப் பெறாமகன் தன் சித்திக்கு நடந்ததை ஒளிவடிவில் காண வேண்டுமென்று நினைக்கிறீர்களா? இசைப்பிரியா எத்தனயோ குழந்தைகளின் பிரியமான சிற்றன்னை. அது உங்களுக்குத் தெரியுமா?? எங்களுக்காக மரணித்த அவளது ஆத்மாவை இப்படி அவமானப்படுத்தலாமா?? 
42 வருடமாக எமது பிரச்சனையை தமிழக மக்கள் தெரியாமலா இருக்கிறார்கள். இந்தப் படம் தான் அவர்கள் மனங்களில் மாற்றத்தை தருமா?? கிடைத்தற்கரிய தலைவரைச் சந்ததி கூட மிஞ்சாமல் அழித்துவிட்டார்களே??? எங்க போனார்கள் தமிழக மக்கள்?? இந்தப் படம் தமிழ்மக்கள் இழந்தவை எல்லாவற்றையும் திருப்பித் தருமா??
புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து இந்தப்படம் (18.05.2009) வெளிவருவதைத் தடுக்க உதவுங்கள். இசைப்பிரியாவின் ஆத்மாவிற்கு அமைதி தாருங்கள்.
நன்றி
திருமதி தர்மினி வாகீசன்
( இசைப்பிரியாவின் குடும்பம் சார்பாக)
14.05.2018

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.