ரமழான் நோன்பிற்கு பேரீச்சம்பழங்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை!

ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ள இச்சமயத்தில், இஸ்லாமிய வழிபாட்டாளர்களின் பயன்பாட்டுக்கு போதியளவான பேரீச்சம்பழங்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச். ஹலீம் மற்றும் தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி ஆகியோரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பிரதமர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ரமழான் நோன்பு காலத்தில், முஸ்லிம்களின் பயன்பாட்டுக்காக, பள்ளிவாசல்கள் மூலம் பேரீச்சம்பழங்களை விநியோகிக்கப்படுவதோடு, கடந்த வருடம் சவூதி அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட, 150 தொன் பேரீச்சம்பழங்கள் அவ்வாறு விநியோகிக்கப்பட்டதோடு, சதொச நிறுவனத்தாலும் மேலும் 150 தொன் பேரீச்சம்பழங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டில், மத்திய கிழக்கில் பேரீத்தம்பழ அறுவடை குறைவடைந்ததன் காரணமாக, இலவசமாக கிடைக்கப்பெறும் பேரீச்சம்பழங்கள் குறைவடைந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு சதொச ஊடாக இவ்வாண்டுக்கு அவசியமான போதியளவான பேரீச்சம்பழங்களை இறக்குமதி செய்யுமாறு சதொச தலைவருக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதோடு, பேரீத்தம்பழங்களை விநியோகிப்பது தொடர்பில் உதவுமாறு ஏனைய தனியார் சுபர் மார்கெட்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
Powered by Blogger.