காந்தியிடம் இருந்தது... ரஜினியிடமும் இருக்கிறது!

ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி, அவரை இனி ‘சூப்பர்

ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம்; தமிழக முதல்வர் என்று அழைத்துப் பழகுங்கள்’’ என ரஜினி ரசிகர்களுக்குப் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் ‘காந்திய மக்கள் இயக்க’த்தின் தலைவர் தமிழருவி மணியன்.

அவரை நேரில் சந்தித்துப் பேசினேன்.

*‘`தமிழருவி மணியன், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி... இருவரில், ரஜினிகாந்தின் அரசியல் குரு யார்?’’*

‘`ரஜினிகாந்துக்குத் தமிழருவி மணியன் ஆலோசகரும் கிடையாது, அறிவுரையாளனும் கிடையாது... உற்ற தோழன். ரஜினிகாந்தைப் பொறுத்தவரையில், அவர் என்னை உடன் பிறந்த சகோதரனாக பாவிக்கிறார்.’’

*‘`சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பது, கட்டவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வது... என, தமிழக இளைஞர்களைத் தவறாக வழிநடத்தியவர் ரஜினிகாந்த் என்ற குற்றச் சாட்டுகள் தொடரும் நேரத்தில், ‘ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி’ என்கிறீர்களே..?’’*

‘`காந்தியம் முன்னெடுத்து வைக்கக்கூடிய எளிமை, பணிவு, அடக்கம் மூன்றும் ரஜினிகாந்திடம் இருக்கிறது... உடனே ‘ரஜினிகாந்த் மகாத்மாவா...’ என்று நீங்கள் கேட்டுவிடக் கூடாது. காந்தியம் என்பது பொதுவாழ்வில் தன்னலத் துறப்பு. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள்தான் பொதுவாழ்வில் முன்னிறுத்தப்பட வேண்டும். தன்னுடைய நலனைப் பெருக்கிக்கொள்ளவோ, குடும்ப நலனைக் கூட்டிக்கொள்ளவோ ரஜினிகாந்த் அரசியல் களத்துக்கு வரவில்லை.’’

*‘`கொள்கைகள் குறித்துத் தெளிவான திட்டங்களை ரஜினி வைத்திருப்பதாகச் சொல்கிறீர்கள். அது என்ன கொள்கை?’’*

``கட்சியைத் தொடங்க வேண்டியவர், கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டியவர் ரஜினிதான். எனவே, அவர் என்ன கொள்கைகளை வைத்திருக்கிறார் என்பதுகுறித்து தமிழருவி மணியன் சொல்லக்கூடாது. கொள்கை என்ன, லட்சியம் என்ன, எதை நோக்கி மக்களிடம் நாங்கள் வருகிறோம் என்பதை யெல்லாம் அவர் தெளிவுபடுத்துவதற்கான உரிய நேரம் வரும்.’’

*‘`பணம் சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை - எனச் சொல்லும் ரஜினிகாந்தை எப்படி நம்புவது?’’*

‘`புதிதாகக் கட்சி தொடங்கும் அனைவருமே, தங்கள் கட்சியில் அனைத்து மக்களையும் இணைக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். ஆனால், கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னரே, ‘என் பெயரைப் பயன்படுத்தி அரசியலில், பணம் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டவர்கள் இப்போதே என்னை விட்டு விலகிவிடுங்கள்’ என்று பகிரங்கமாக எச்சரிக்கைக் குரல் எழுப்பிய ஒரே மனிதன்... தமிழக அரசியல் வரலாற்றிலேயே ரஜினிகாந்த் மட்டும்தான்.’’

*‘` ‘பதவி சுகம் தேடுவோருக்கு ம.தி.மு.க-வில் இடம் இல்லை’ என்றுதானே வைகோவும் சொல்கிறார்?’’*

``அதனால்தான், ‘வைகோ முதலமைச்சர் ஆகவேண்டும்’ என்று நான் ஏற்கெனவே சொன்னேன். ‘வைகோ பின்னால் தமிழகமே திரண்டு நிற்கிறது; அவர்களோடு சேர்ந்து நானும் கொடிபிடித்துச் செல்கிறேன்’ என்று சொல்லி நான் ஆதரவு தெரிவிக்கவில்லை.

வைகோவுக்கு 5 விழுக்காட்டுக்கு மேல் வாக்கு வங்கி கிடையாது என்பது எனக்கும் தெரியும். ஆனால், ஒரு நல்ல மனிதனை, நேர்மையாளனை, போர்க்குணம் மிக்க மனிதனை முன்னிறுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக வைகோவுக்குக் குரல் கொடுத்தேன். ஆனால், தன்னுடைய பிம்பத்தைத் தானே உடைத்துக்கொண்ட மனிதர் வைகோ! அதனால்தான், ‘விதைநெல்லைத் தின்றுவிட்ட விவசாயி நீங்கள்’ என்று வைகோவிடமே நேரில் சொல்லியிருக்கிறேன். மாறி மாறி வைகோ வகுத்த தவறான வியூகங்களால், தனக்குத்தானே அரசியல் தற்கொலை செய்துகொண்ட அரசியல்வாதியாக அவர் மாறிப்போனார்.’’

*‘` ‘மு.க.ஸ்டாலினைத் தமிழக முதல்வராக்குவதே என் லட்சியம்’ என்று தற்போது வைகோ பேசிவருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்..?’’*

‘`தன்னுடைய சித்திரத்தைத் தானே சிதைத்துக்கொள்கிற செய்தி அது. இதற்குக் குற்றம் சாட்டப்பட வேண்டியவர் தமிழருவி மணியன் கிடையாது... வைகோதான்!’’

*‘` ‘2014 இல் பி.ஜே.பி கூட்டணி, 2016 இல் வைகோவுக்கு ஆதரவு, 2018 இல் ரஜினிகாந்துக்கு ஆதரவு...’ தமிழருவி மணியன் தடுமாறுகிறாரா?’’*

‘`என்மீது விமர்சனக் கணைகள் வீசுவோருக்கு, தனிப்பட்ட அந்தரங்கமான அபிலாஷைகள் உண்டு. அவர்களின் மறைமுகமான திட்டங்களுக்குத் தமிழருவி மணியன் தடையாக இருப்பதால், கோபம் கொள்கிறார்கள். ஆனாலும் 50 ஆண்டுக்காலம் நான் கடந்துவந்திருக்கிற இந்த அரசியலில், ஒரு 50 பைசாவேனும் தவறான வழியில் சேர்த்துவிட்டேன் என அவர்களால் களங்கம் கற்பிக்க முடியுமா... முடியாது! அதனால்தான், ‘இவன் கொள்கைக் குழப்பத்தில் தடுமாறுகிறான்’ என்று புதிதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

‘இரண்டு திராவிடக் கட்சிகளிலிருந்து தமிழகம் விடுவிக்கப்பட்டாலொழிய, தமிழகத்துக்கு கதி மோட்சமே கிடையாது’ என்று நான் தெளிவாகக் கூறிவிட்டேனே... ‘ஊழலற்ற ஆட்சி’ என்ற ஒற்றை இலக்கை மையமாக வைத்துதான் அரசியல் சதுரங்கத்தில் என்னால் இயன்றளவுக்குக் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறேன்’’

*“ ‘கழகங்கள் இல்லாத் தமிழகம்’ எனக் கூறிவரும் பா.ஜ.க-வுக்கு நீங்களும் சப்போர்ட் செய்கிறீர்களா?’’*

‘`பா.ஜ.க-வைக் கொண்டுவந்து கொலுவேற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அப்படி ஓர் எண்ணமிருந்தால், பகிரங்கமாக மோடியை ஆதரித்திருப்பேனே... 2014-இல் பா.ஜ.க கூட்டணிக்காக நான் முயன்றுவந்தபோதுகூட மோடியைப் பற்றிப் பெரிதாகப் பேசிவிடவில்லை.

தமிழகத்தில், பா.ஜ.க வந்து அரியாசனத்தில் அமரவேண்டும் என்று நினைப்பவனல்லன் நான். சாதி, மொழி, இனம் கடந்து ஒட்டுமொத்தத் தமிழர் நலனுக்கான நல்லாட்சி அமையவேண்டும் என்பதுதான் என் கருத்து.’’

*‘`ரஜினிகாந்த் ஆட்சியமைத்தால்கூட, தேர்தல்களத்தில் கோடிகளைக் கொட்டி வெற்றிபெற்ற அவரது அமைச்சரவையினர் நேர்மையாக செயல்படுவார்கள் என்று எப்படி நம்புவது?’’*

‘`கோடிகளைக் கொட்டித்தான் அரசியலில் ஜெயிக்கவேண்டும் என்பது ரஜினிகாந்தின் நோக்கம் இல்லை. ‘பணம் வாங்கிக்கொண்டுதான் மக்கள் வாக்களிக்கிறார்கள்’ என்ற அர்த்தத்தில்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். ஒரு மனிதன்மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டால், இவர்தான் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்ற அபிப்ராயம் அவர்களுக்குள் உதித்துவிட்டால், வேறு எதையும் எதிர்பார்க்கமாட்டார்கள்

*1972-ல் பண பலம் அதிகார பலம் பொருந்திய தி.மு.க-வை எதிர்த்து தனிமனிதனாக எம்.ஜி.ஆர் (வேட்பாளர் மாயத்தேவர்) ஜெயித்ததே இதற்கு நல்ல உதாரணம். அன்றைக்கு எம்.ஜி.ஆர்மீது மக்களுக்கு இருந்த நேசமிகு மனோபாவம் இன்றைக்கு ரஜினிகாந்த்மீது இருக்கிறது.’’

*‘` ‘எல்லோருக்கும் நல்லவராக இருப்பதுபோல் ரஜினி நடிப்பது ஏமாற்றுவேலை’ என்று கடந்த ஆண்டு பேசிய நீங்கள், ‘வெறுப்பு அரசியல் செய்யாதவர் ரஜினி’ என இப்போது மாற்றிப்பேசுவது சந்தர்ப்பவாதம் இல்லையா?’’*

``நிச்சயமாக சந்தர்ப்பவாதம் இல்லை... ரஜினியைத் திரும்பத் திரும்ப நான் சந்தித்திருக்கிறேன் என்ற முறையில், ரஜினியால் எனக்குள் ஏற்பட்ட ரசவாத மாற்றம் அது.

ஒவ்வொரு கருத்துக்கும் எதிர்வினையாற்றுவது தான் அரசியல் என்றாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், ரஜினிகாந்தின் மௌனம் தவறான புரிதலின் காரணமாக மக்களிடையே வேறு மாதிரியாகப் போய்ச் சேருகிறது. ஆனால், அவரிடம் பலமுறை பேசியிருக்கிறேன். அவர் தெளிவாக இருக்கிறார். ‘மக்களுக்கு நல்லது செய்வது என்ற முடிவோடு அரசியல் களத்துக்கு வந்திருப்பவன் நான். அதனால், எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக்கொண்டு எதிர்வினை ஆற்றுவதால் எந்தவிதப் பயனும் இல்லை’ என்று தெளிவாகச் சொல்கிறார்.’’

*‘`போராடுவதால் விடை கிடைத்துவிடுமா... என்று தட்டையாகக் கேள்வி கேட்பதே, சர்வாதிகாரத்தின் எள்ளலாகத்தானே இருக்கிறது?’’*

``நான் தட்டையாகக் கேட்கவில்லை... நெடுவாசல் பிரச்னையிலேயே கூட மக்கள்தான் வென்றிருக்கிறார்கள். மதுவிலக்கு, முல்லைப்பெரியாறு, நியூட்ரினோ எனப் பல்வேறு பிரச்னைகளுக்காக, வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோதும் எந்த இடத்திலும் அவர் கட்சிக்கொடியைத் தூக்கிப் பிடிக்கவில்லை. இந்த எண்ணம் ஏன் அனைவருக்கும் வரவில்லை..?

`இந்த ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு நாம் வருவது... அல்லது அந்த ஆட்கள் வராமல் நாம் பார்த்துக்கொள்வது’ என அரசியல் கணக்கிட்டுத்தானே போராட்டங்களே நடக்கின்றன. இப்போது பாரதிராஜாவுக்கு திடீரென்று இவ்வளவு கோபம் வந்துவிட்டதே... இத்தனை நாள்களாக ஒவ்வொரு பிரச்னைக்கும் நீங்கள் கொடி தூக்கிப் போய் நின்றிருக்கிறீர்களா? இவையெல்லாம் முழுக்க முழுக்க வெற்று விளம்பரத்துக்காக நடத்தப்படுகிற நாடகங்கள்!’’

*``சிஸ்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் கெட்டுவிட்டதா? மத்திய பா.ஜ.க-வின் செயல்பாடுகள் குறித்து ரஜினி எந்தக் கருத்தும் தெரிவிப்பதில்லையே?’’*

‘`தெரு முழுவதும் குப்பை கிடக்கிறது... உண்மைதான். ஆனால், முதலில் என் வீட்டில் கிடக்கும் குப்பையை சுத்தப்படுத்திவிட்டுத்தான் அடுத்ததாகத் தெருவில் வந்து நிற்கவேண்டும்!’’

*``அ.தி.மு.க-வின் எதிர்காலம் என்னவாகும்?’’*

‘`ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் இந்த ஆயுட்காலத்தை ஆதாயத்தோடு நடத்தி முடிப்பதெப்படி என்ற சிந்தனையில்தான் இப்போதைய அ.தி.மு.க ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அ.தி.மு.க என்பது முடிக்கப்பட வேண்டிய அமைப்பு. அப்படி முடித்து வைக்கப்படும்போது அதற்காக யாரும் கண்ணீர் விடப்போவதுமில்லை... அதற்கான அவசியமும் இல்லை!’’ 
Powered by Blogger.