அப்பாவுக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்-கௌதம்!

நடிகர் கௌதம் கார்த்தி தனது அப்பாவும், நடிகருமான
கார்த்திக்கின் மற்றொரு பக்கத்தை மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் படப்பிடிப்பில் பார்த்ததாகக் கூறியுள்ளார்.
நவரச நாயகன் கார்த்திக்கும், அவரின் மகன் கெளதம் கார்த்திக்கும் சேர்ந்து நடித்திருக்கும் படம் மிஸ்டர் சந்திரமௌலி . இதில் ரெஜினா, வரலட்சுமி இருவரும் நாயகிகளாக நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். திரு இயக்கியுள்ள இப்படத்தை தனஞ்செயன் தயாரித்திருக்கிறார்.
மிஸ்டர் சந்திரமௌலி படம் வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், படத்தை புரமோட் செய்வதற்காக ஒரு மொபைல் ஆப் ஒன்று உருவாக்கி, ரசிகர்களுக்கு வினாடி -வினா போட்டி வைத்துள்ளனர். இந்த போட்டியில் 10 கேள்விகளுக்கு சரியாகப் பதில் சொல்பவர்களுக்கு பல பரிசுகளை வழங்குகின்றனர். இந்த மொபைல் ஆப் பின் அறிமுக விழா நேற்று(ஜூன்25) மாலை சென்னையில் நடை பெற்றது.
இந்த விழாவில் கெளதம் கார்த்திக் பேசும் போது “ஊட்டியில் இருக்கும் எனது தாத்தா வீட்டில் தான் வளர்ந்தேன். என் அப்பா சினிமாவில் பிஸியாக இருந்ததால் வருடத்துக்கு ஒரு முறைதான் வந்து பார்த்து செல்வார். நான் பிரபலமான நடிகரின் மகனாக இருந்தாலும், எனக்கு சினிமா மோகம் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். அதையும் மீறி நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். நான் நடிக்க வரும் வரை எனக்கு சினிமாவைப் பற்றி தெரியாது, சினிமாவில் என் அப்பா எப்படிப் பட்டவர்? என்பதும் தெரியாது!
கடல் படத்தில் அறிமுகமான போது மணிரத்னம் சார் தான் சினிமாவை கத்துக் கொடுத்தார்! நான் சினிமாவுக்கு வந்த போது,என் அப்பாவை பற்றி எல்லோரும் பெருமையாக பேசினார்கள். அவர் எனக்கு அப்பாவாக மட்டும் தான் தெரியும், நடிகர் என்கிற அவரின் இன்னொரு பக்கம் எனக்கு தெரியாமலே இருந்தது. மிஸ்டர் சந்திர மெளலி படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த போது தான் அவரின் இன்னோரு பக்கத்தை நான் பார்த்தேன். அவரை அருகில் இருந்த பார்த்தபோது தான் அவரின் நடிப்புத் திறமை தெரிய வந்தது. இதில் அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறேன்” என்றார்
மேலும் இவ்விழாவில் பேசிய நடிகர் சதீஷ், “இந்த படத்தில் கவுதம் சிறப்பாக நடித்துள்ளார் என அனைவரும் பாராட்டினார்கள். ஏனென்றால், அவரது முந்தைய படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அவர் கேரக்டராகவே வாழ்ந்தார். உண்மையிலேயே அவரது கேரக்டர் அதுதான். யாரும் தவறாக நினைக்க வேண்டாம். பேயை பார்த்தால் அவருக்கு பயம். நான் அதைதான் சொன்னேன். இந்த படத்தில் உண்மையாகவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். பாக்ஸிங்குக்காக உடற்பயிற்சி செய்து கடுமையாக உழைத்திருக்கிறார். படத்தில் 2 ஹீரோயின்கள் இருந்தும், அவர் தான் அழகாக இருப்பார். படப்பிடிப்பில் கார்த்திக் சாரை பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அவரிடம் முத்தம் வாங்க நாங்க தினமும் காத்திருப்போம். டார்லிங் என கூப்பிட்டு அவர் கொடுக்கும் முத்தம் தான் எங்களுக்கு உத்வேகம். இது எங்களுக்கு கிடைத்த பெருமை” என்றார்.
இவர்களைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் திரு பேசும் போது, “அப்பா மகன் பாசம், உறவு பற்றி நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த படத்தில் அதை வேறு ஒரு கோணத்தில் காட்டியுள்ளோம். கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தது மாதிரி தமிழ் சினிமாவில் நடக்குமா என்று தெரியவில்லை.
இதைத்தவிர படத்தில் மற்றொரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசியுள்ளோம். கால் டாக்சி கலாச்சாரம் இன்று பரவலாக இருக்கிறது. சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து கதையை உருவாக்கியுள்ளோம். கௌதம் கார்த்திக்கின் மெனக்கெடல் இந்த படத்தின் பெரிய பலம். கௌதம் படப்பிடிப்பில் நேரம் தவறாமை சிறப்பான குணம், அதை அவர் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். ரெஜினா மிகவும் இனிமையான ஒரு நடிகை. பைரவி என்ற கதாபாத்திரம் தான் சந்திரமௌலி படத்தின் முதுகெலும்பு. அந்த கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்திருக்கிறார்” என்றார்.
Powered by Blogger.