வளர்மதிக்கு நீதிமன்ற காவல்!

தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி, இன்று (ஜூன் 28) சென்னை சைதாப்பேட்டை 17ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ஜனவரி மாதம் 24ஆம் தேதி சென்னை வடபழனி ஆர்.கே.வி ஸ்டூடியோவில் அச்சமில்லை அச்சமில்லை என்ற பெயரில் பாடல் வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த பாடல் வெளியீட்டு விழாவில் வளர்மதி பேசியது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருந்ததாகக் கூறி வடபழனி காவல் நிலையத்தில் தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பசுமை வழிச்சாலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக, வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

வளர்மதி மீது ஏற்கனவே போடப்பட்டிருந்த தேச துரோக வழக்கில் கைது செய்ததற்கான உத்தரவை சேலம் மத்திய சிறையில் வழங்கினர் வடபழனி காவல் துறையினர். இதனை அடுத்து, கடந்த 26ஆம் தேதியன்று சேலம் மத்திய சிறையில் இருந்து வளர்மதியைச் சென்னைக்கு அழைத்து வந்தனர் காவல்துறையினர். இந்நிலையில் இன்று சைதாப்பேட்டை 17ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வளர்மதி ஆஜர்படுத்தப்பட்டார்.

15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிடப்பட்டதை அடுத்து, வளர்மதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Powered by Blogger.