வவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

வவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததுடன் தாக்க முற்பட்டதை கண்டித்து இன்று நகரசபைக்கு முன்பாக ஏ9 வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் மற்றும் செயலாளர் இ.தயாபரன் ஆகியோர் கடமை நிமிர்த்தம் நகரசபை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு பின்புறமாக சட்டத்தரணிகளுக்கான வாகனத் தரிப்பிடம் அமைப்பது தொடர்பாக பார்வையிடச் சென்ற சமயம் தொலைபேசியில் உரையாடியவாறு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலைக்கு சென்று கொண்டிருந்த சிறைக்காவலர் நகரசபை வாகனத்திற்கு அண்மையில் சென்ற நிலையில் விபத்தினை தவிர்ப்பதற்காக நகரசபை சாரதி வாகனத்தினை நிறுத்தி விபத்தினை தவிர்த்திருந்தார்.

எனினும் சிறைக்காவலர் சாரதியுடன் முரண்பட்ட நிலையில் நகரசபை தலைவர் அதனை தடுப்பதற்காக தன்னை அறிமுகப்படுத்திய போதிலும் சிறைக்காவலர் நகரசபை தலைவர் மற்றும் செயலாளரையும் உதாசீனப்படுத்தி தகாத வார்த்தை பிரயோகங்களால் பேசியதுடன் தாக்கவும் முற்பட்டிருந்தார்.

இதனை கண்டித்தே இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர்களான எம். தியாகராசா, ஆர். இந்திரராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், செட்டிகுளம் பிரதேசசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேசசபையின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டதுடன் வவுனியா வர்த்தக சங்கத்தினர், நகரசபை ஊழியர்கள், இலங்கை தேசிய பொது அரச ஊழியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், வவுனியா நகரசபை உத்தியோகத்தர் நலன்புரிச்சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
Powered by Blogger.