அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது போர்ச்சுகல்!

21-வது உலகக்கோப்பை கால்பந்துத் தொடர் தற்போது ரஷ்யாவில்
நடைபெற்று வருகிறது. மார்டோவியா அரங்கத்தில் நடைபெற்ற ‘பி’ பிரிவின் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில், போர்ச்சுகல் மற்றும் இரான் அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. எனினும், 5 புள்ளிகளுடன் போர்ச்சுகல் ‘ரவுண்ட் ஆஃப் 16’ சுற்றுக்குத் தகுதிபெற்றது.

போட்டி தொடங்குவதற்கு முன், ‘பி’ பிரிவில் போர்ச்சுகல் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இரான் அணி 3 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் இருந்தன. இப்போட்டியில் வெல்லும் அணி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் என்பதால், இவ்விரு அணிகளும் தொடக்கம் முதலே கடுமையாக மோதின.

முதல் பாதியில் போர்ச்சுகல் அணியே அதிகம் ஆதிக்கம் செலுத்தியது. 71 சதவிகித அளவில் பந்தை தன்வசம் வைத்திருந்தது அந்த அணி. சரியாக 45-வது நிமிடத்தில் அந்த அணியின் ரிகார்டோ குரேஷ்மா பாக்ஸுக்கு வெளியே இருந்து அற்புதமாகக் கோல் அடித்து, 1-0 என போர்ச்சுகல் அணி முன்னிலை பெற உதவினார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் ரொனால்டோ அல்லாத போர்ச்சுகலின் முதல் கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பாதியில் 3 முறை முயன்றும் இரானால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ அடித்த பெனால்டியைத் தடுக்கும் ஈரான் கோல்கீப்பர்

இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்தில் டிஃபண்டர் செய்த தவறால், போர்ச்சுகல் அணி பெனால்டி வாய்ப்பு கேட்டது.  VAR சிஸ்டம் மூலம் டிஃபண்டரின் தவற்றை உறுதி செய்த ரெஃப்ரி பெனால்டி வாய்ப்பளித்தார். ‘கோல்டன் பூட்’ பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ  பெனால்டி கிக் செய்யத் தயாரானார். ‘கோல் நிச்சயம்… 2-0 லட்சியம்’ என போர்ச்சுகல் ரசிகர்கள் பெனால்டி கோலை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். தனக்கு இடதுபுறமாக வந்த பந்தை சாமர்த்தியமாக சேவ் செய்தார் இரான் அணியின் கோல் கீப்பர் அலி பெய்ரன்வேண்ட். ஆம்… ரொனால்டோ பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் மெஸ்ஸி தொடங்கிவைத்த பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டவர்களின் பட்டியலில், ஆறாவதாக இணைந்தார் ரொனால்டோ.

இரு அணிகளும் அட்டாக்கிங் ஆட்டத்தில் ஈடுபட்டதால் ஆட்டம் பரபரப்பின் உச்சத்தை எட்டியது. போதாக்குறைக்கு 83-வது நிமிடத்தில் இரான் வீரர் முர்டெஸா பொராலிகஞ்சியை, ரொனால்டோ கீழே தள்ளிவிட்டதால் ‘ரெட் கார்டு’ கொடுக்க  VAR சிஸ்டத்தில் ரிவ்யூ செய்யப்பட்டது. ஆனால், ‘யெல்லோ கார்டு’ போதுமானதென ரெஃப்ரி முடிவெடுத்து, ரொனால்டோவை புக்கிங் செய்தார்.

ஆட்டம் இறுதிகட்டத்தை எட்டிக்கொண்டிருந்த நிலையில், நிறுத்த நேரமாகக் கூடுதல் நிமிடங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், பாஸ் வந்த பந்து போர்ச்சுகல் வீரரின் கையில் பட்டு ‘ஹேண்ட் பால்’ ஆனதால், இரான் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த அணியின் வீரர் கரிம், பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். மேட்ச் 1-1 என்ற நிலையில் டிராவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இரான் அணி வீரர் மெஹ்தி தரேமி அடித்த பந்து கோல் கம்பத்தை உரசிக்கொண்டு சைட் நெட்டில் பட்டது. அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை மயிரிழையில் இரான் தவறவிட்டது என்றே சொல்லலாம்.

சோகத்தில் ஈரான் வீரர்கள்

1-1 கோல் கணக்கில் மேட்ச் டிரா ஆனது. ஒரு போட்டியில் வெற்றி பெற்று, இரண்டு போட்டிகளை டிரா செய்ததால் 5 புள்ளிகளைப் பெற்றது போர்ச்சுகல். 4 புள்ளிகளைப் பெற்று ‘பி’ பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததால், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது இரான். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.