சுமந்திரனிற்கு எதிராக ஈ.சரவணபவன்,சி.சிறீதரன் பங்கு சர்ச்சை!

ஏம்.ஏ.சுமந்திரனிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்  ஈ.சரவணபவன் கொண்டுவர இருந்த குற்றச்சாட்டு பிரேரணையினையடுத்து தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் காலம் குறிப்பிடப்படாது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 10ம் திகதி முல்லைதீவு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் கூட்டப்படவிருந்தது.

இக்கூட்டத்தில் சுமந்திரனிற்கு எதிராக குற்றச்சாட்டு பிரேரணையொன்றை கனகசபாபதி ஊடாக கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்  முற்பட்டிருந்தார்.

இதனையடுத்தே சுமந்திரனின் தலையீட்டால் மத்திய குழுக்கூட்டம் தடைசெய்யப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரனிற்கு எதிராக ஈ.சரவணபவன்,சி.சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் பின்னடைவு மற்றும் ஈபிடிபியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சிகளை கைபற்றியமை என்பவை தொடர்பில் சுமந்திரன் மீது இத்தரப்புக்கள் அதிருப்தி கொண்டிருப்பதுடன் குற்றஞ்சாட்டியும் வருகின்றன.

எனினும் உண்மையான காரணம் தமிழரசுக்கட்சியின் இளைஞரணியை உருவாக்க ஈ.சரவணபவன் மேற்கொண்ட முயற்சியை சுமந்திரன் தடுத்து நிறுத்தியமையே எனப்படுகின்றது.

மாவை சேனாதிராசாவின் மகனை தலைவராக முன்னிறுத்தி தனது உதவியாளரை செயலாளராக்கி   தமிழரசு இளைஞரணியை உருவாக்க ஈ.சரவணபவன் முன்னின்று செயற்பட்டிருந்தார்.

குறிப்பாக முதலமைச்சரது இளைஞரணி உருவாக்கத்திற்கு முன்னதாக தமிழரசு இளைஞரணிக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டவும் அதனை தனது கைகளுள் வைத்திருக்கவும் ஈ.சரவணபவன் விரும்பியிருந்தார்.

எனினும் தமிழரசின் அனைத்து கட்டுப்பாடுகளும் தம் வசமேயிருக்கவேண்டுமென விரும்பிய சுமந்திரன் இதனை தடுத்து நிறுத்தி விட்டார்.

இதனால் கடும் சீற்றமடைந்துள்ள சரவணபவன் தற்போது சுமந்திரனின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரேரணையொன்றை கொண்டுவர கட்சி மத்திய குழு கூட்டத்தில் திட்டமிட்டிருந்தார்.

இதன் எதிரொலியாகவே தற்போது மத்திய குழுக்கூட்டத்தை தடுத்து நிறுத்துகின்ற நிலை வரை குழு மோதல் சென்றுள்ளது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.