மாட்டை அடக்க சொல்லிட்டா என்பாடு திண்டாட்டம்தான்!

ஜல்லிக்கட்டு நாயகன் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்றும், யாராவது என்னை மாட்டை அடக்க சொல்லிவிட்டால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும்.

அதனால் அப்படி அழைக்க வேண்டாம் என்று சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ். கூறினார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று சென்னை மெரினாவில்
போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் மிகப் பெரிய போராட்டமாகவும் மாறியது.

அப்போது முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக மத்திய அரசிடம் பேசி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
வாங்கி தந்ததாகவும், அதிமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால், ஓ.பன்னீர்செல்வத்தை, ஜல்லிக்கட்டு நாயகனே என்று அமைச்சர்கள் உட்பட
அதிமுக நிர்வாகிகள் அழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின்போது, அமைச்சர் காமராஜ், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பற்றி குறிப்பிடும்போது ஜல்லிக்கட்டு
நாயகனே என்று கூறினார்.

அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், என்னைப் பற்றி குறிப்பிடும்போது, ஜல்லிக்கட்டு நாயகனே என்று அடைமொழி வைத்து அனைவரும்  அழைக்கிறீர்கள்... அப்படி அழைக்காதீர்கள் என்றார்.

தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு வேடிக்கை பார்க்க செல்லும்போது, ஜல்லிக்கட்டு நாயகன் வந்துள்ளார், அவர் காளையை அடக்க வேண்டும் என்று யாராவது சொல்லிவிட்டால், என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும். அதனால் யாரும் என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார். அவரது இந்த பேச்சால் சட்டப்பேரவை சிரிப்பலையில் மூழ்கியது.
Powered by Blogger.