மட்டக்களப்பு மக்களை அச்சுறுத்தும் யானைகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மைலந்தனைக் கிராமத்தின் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து யானைகளில் தொல்லைகளால் மக்கள் பாரிய உயிர் அச்சுறுத்தலுடன் வாழ்ந்து வருகின்றனர்.


புணாணை காட்டுப் பகுதியில் இருந்து வரும் யானைகள் பொழும்பு பிரதான வீதியை கடந்து மக்கள் குடியிருப்பு பகுதி மற்றும் சேனைப் பயிர்ச் செய்கை இடங்களுக்கு இரவு நேரங்களில் வருகை தருகின்றது.

இக்கிராமத்தில் வாழும் மக்கள் தங்களுடைய ஜீவனோபாய தொழிலாக சேனைப் பயிர்ச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் யானைகளின் வருகையால் சேனைப் பயிர் செய்வதில் பாரிய இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

அந்த வகையில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வருகை தந்த யானைகள் வீடு ஒன்றினை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், குடியிருப்பு பகுதியில் காணப்பட்ட தென்னை மரங்களை அழித்து சேதப்படுத்தியுள்ளதுடன், சேனைப் பயிர் செய்கையில் காணப்பட்ட மரவள்ளியை சேதப்படுத்தியதுடன், விவசாயத்திற்காக வைக்கப்பட்ட சோளம் விதைகளையும் நாசம் செய்துள்ளது.

இதனால் மக்கள் அச்சத்தின் மத்தியில் தங்களுடைய வாழ் நாளை கழித்து வருவதாகவும், வீட்டினை யானை சேதப்படுத்தும் போது வீட்டின் கைக் குழந்தையுடன் இருந்தவர்கள் குழந்தையை காப்பாற்றும் பொருட்டு ஓடி தப்பியுள்ளதாகவும், சேனைப் பயிர்ச் செய்கைகளை அழித்து விடுவதால் தங்களுடைய ஜீவனோபாயம் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்திலுள்ள மக்கள் இவ்விடயமாக பல தடவை அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை. சேனைப் பயிர்ச் செய்கைகளை பயன்படுத்துவதற்கு இப்பிரதேசத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காணப்படுகின்றமையால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தண்ணீர் பெற்று நீர்பாய்ச்சி சேனைப் பயிர் மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

ஆனால்இரவு நேரங்களில் வரும் யானைகள் சேனைகளை அழித்துச் செல்வதால் எங்கள் வாழ்க்கை சீரழிந்து விடும் நிலைமை உள்ளது. இவ்விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கண்டு கொள்வதுமில்லை, சமூகமளிப்பதும் இல்லை.

எனவே எமது பிரதேசத்தில் உள்ள மக்களின் குடியிருப்புக்கள் மற்றும் சேனைப் பயிர்ச் செய்கைகளை பாதுகாக்கும் முகமாக உடனடியாக குடியிப்பு பகுதியினை அண்மித்து யானை வேலி அமைத்து தருவதற்கு அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மைலந்தனை மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.