அரசு விருந்தினர் மாளிகையில் பாலியல் கொடுமை!

வேலை வாங்கி தருவதாகக் கூறி 22 வயதான பெண்ணை நான்கு நாட்களாக விருந்தினர் மாளிகையில் அடைத்து வைத்து 40 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.

சண்டிகரைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள மோர்ஹினி ஹில்ஸ் பகுதிக்கு வேலை தேடி சென்றுள்ளார். அங்கிருந்த ஒருவர் வேலை தருவதாகக் கூறி அந்தப் பெண்ணை, மோர்ஹினியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அழைத்துச் சென்று அவரை அடைத்து வைத்துள்ளனர். ஜூலை 15 ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை அந்தப் பெண்ணை 40 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நான்கு நாட்கள் கழித்து அவர்களிடமிருந்து தப்பித்து வந்த அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது, தன்னை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் ஒருவர், தன்னுடைய கணவருக்கு அறிமுகமானவர் என்றும், அவர்தான் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸ், விருந்தினர் மாளிகையின் நிர்வாகிகள் இரண்டு பேரைக் கைது செய்தனர். மருத்துவப் பரிசோதனையில் அந்த பெண் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது என இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.