யாழ்.கோட்டைக்குள் இராணுவமும் கூட்டமைப்பின் சாதனையும்!

யாழ்.கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.


அத்துடன், நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்த இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடமாகாண ஆளுநரின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “யாழ். குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இவை தவிர பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இராமேஸ்வரத்திலும் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டுமானால் இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டிய தேவையுள்ளது.

விடுதலைப் புலிகளாலேயே வடக்குக்கு இராணுவம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

யாழ்.கோட்டையில் ஆரம்பத்தில் போர்த்துக்கேயரும் பின்னர் டச்சுக்காரர்களும் பின்னர் ஆங்கிலேயரும் இருந்தனர். பின்னர் அவர்களைத் தொடர்ந்து இராணுவமும் பின்னர் விடுதலைப் புலிகளும் இருந்தனர்.

இவ்வாறான நிலையில் தற்போது அங்கு இராணுவம் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குடாநாட்டுக்குள் போதைவஸ்த்து கடத்தல் அதிகரித்துள்ளது. இப் போதைவஸ்து நாட்டுக்குள் கடல் வழியாகவே 80 வீதம் வருகின்றது.

10 வீதம் விமானம் மூலமும், 10வீதம் துறைமுகங்கள் ஊடாகவுமே நாட்டுக்குள் வருகின்றன. இதிலும் குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைவஸ்த்து கடத்தல்கள் இடம்பெறுவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
Powered by Blogger.