திரைத்துறையினருக்கு பாடம் புகட்டும் நாசர்!

படப்பிடிப்புத் தளத்தில், நடிகர் நாசரின் செயலால் சமூக வலைதளங்களில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தோடு செயல்பட்டு வருபவர் நாசர். தமிழ்த் திரைப்படத்தில் சித்திரிக்கப்படும் வில்லன் கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருப்பார்கள். அதில் நாசருக்கும் இடமுண்டு.

பொதுவாக சினிமாக்காரர்களுக்கு படப்பிடிப்பு நடத்த இடம் கொடுத்தால் அந்த இடத்தையே அசுத்தமாக்கிவிடுவார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனால் பலர் படப்பிடிப்பு நடத்த இடம் கொடுக்க அனுமதிப்பதில்லை. இந்த குற்றச்சாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு படப்பிடிப்புத் தளங்களில் நாசர் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இது குறித்து அவரின் பார்வை, “நாம் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறோம் என்றால், அந்த இடத்தை இப்படியா அசுத்தமாக வைத்திருப்போம். நாம் செய்யும் வேலையின் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது நமது ஒவ்வொருவரின் கடமை. அப்படி இல்லாவிட்டாலும், அசுத்தம் செய்யாமல் இருக்கலாம்” என அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

தற்போது அவர் நடித்து வரும் நோட்டா திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை திருப்போரூரில் நேற்று(ஜூன் 30) நடைபெற்றது. படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழுவினர் அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில் நடிகர் நாசர் படப்பிடிப்பு குழுவினர்களால் ஆங்காங்கே போடப்பட்டிருந்த காலி டீ கப்களை ஒரு பையில் சேகரித்து குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி, நாசரின் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நாசரின் மனைவி கமிலா நாசர், அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இதை பார்த்தாவது ஒருத்தர் திருந்தினால் கூட மகிழ்வேன்...” எனப் பதிவிட்டுள்ளார்.
Powered by Blogger.