விஜயகலா பேசியதில் என்ன தவறு?-சுமந்திரன்!

விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகளை பற்றி பேசயதில் என்ன தவறுள்ளது? அவர் மீது நீங்கள் கோபப்படுவதில்
நியாயமில்லை. அவரை அப்படி பேசத் தூண்டியவர்களில்தான் நீங்கள் கோபப்பட வேண்டும்.’ இப்படி சிங்கள மக்கள் மத்தியில் நேற்று கூறினார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். அவர் இப்படி கூறிய போது, கூட்டத்தில் மயான அமைதி நிலவியதும் குறிப்பிடத்தக்கது.

புதிய அரசியலமைப்பு முயற்சிகள் தொடர்பாக லங்கா சமசமாஜ கட்சி ஏற்பாடு செய்திருந்த விளக்க கூட்டம் நேற்று எட்டியாந்தோட்டை- ருவன்வெலவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எம்.ஏ.சுமந்திரன் இப்படி தெரிவித்தார்.

சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஊடகவிலாளர்களிடம் இருந்து விஜயகலா விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. இதற்கு சுமந்திரன் பதிலளிக்கும்போது- ‘புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் மூலம் தமிழீழத்தை கொடுக்கப் போவதாக உங்களிடம் சிலர் பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. உங்கள் முன் அரசியலமைப்பு முழுமையாக வைக்கப்படும். நீங்கள் படித்தறியலாம். நாங்கள் புதிதாக எதையும் கோரவில்லை.

முன்னர் சிங்கள அரசுகள் ஒப்புக்கொண்டவற்றைத்தான் கோரியிருக்கிறோம். வடக்கு, கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலம், அவர்கள் தம்மைத்தாமே ஆளும் சுயநிர்ணய உரித்துள்ளவர்கள் என்ற அடிப்படையில் முன்னர் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் இருந்தபோது நீங்களே – உங்கள் தலைவர்களே- தர ஒப்புக் கொண்ட பல இணக்கப்பாடுகளை இப்போது தர மறுக்கிறீர்கள். புலிகள் இருந்தால்தான் இந்த நியாயமான விடயங்களை நீங்கள் செய்வீர்கள் என்றால், அந்த நியாயமான விடயங்களை தமது மக்களிற்கு பெற்றுக்கொடுக்க புலிகள் மீண்டும் வர வேண்டுமென கோருவதை தவிர விஜயகலாவிற்கும் ஏனைய தமிழ் தலைவர்களுக்கும் வேறு என்ன வழியிருக்கிறது?

புலிகள் மீள உருவாக்கப்பட வேண்டுமென விஜயகலா மகேஸ்வரனை வலியுறுத்த செய்தவர்கள் உங்கள் தென்னிலங்கை தலைவர்கள்தான். புலிகளின் காலத்தில் தமிழர்களிற்கு வழங்க ஒப்புக்கொண்ட தீர்வை, நீங்களும் உங்கள் தலைவர்களும் இப்போது- புலிகள் இல்லாதபோதும்- வழங்க முன்வருவீர்களானால் விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் அப்படி பேச வேண்டி வராது. உண்மையில் விஜயகலா மகேஸ்வரனை அப்படி பேச தூண்டியவர்கள் உங்கள் தலைவர்கள்தான். நீங்கள் கோபப்பட வேண்டியது அவர்கள் மீதுதான். விஜயகலா மீது கோபப்பட்டு பலனில்லை’ என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.