நீதிமன்றம் செல்லத் தயாராகும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்!

மட்டக்களப்பு மாநகரசபையால் ஒரு மாத கால இடைக்கால தடை உத்தரவு கிடைக்குமானால் தாம் நீதிமன்றம் செல்லப்போவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் 5பேருக்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதாக சபையால் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை தொடர்பாக கேட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

19.07.2018ம் திகதி நடைபெற்ற மாநகரசபை அமர்வில் உறுப்பினர் திருமதி.செல்வி மனோகரினால் அண்மையில் நடத்தப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையில் வேலைவாய்ப்புக்களுக்கு ஆட்கள் உள்ளீர்க்கப்படும் போது வெளிப்பாட்டுத்தன்மையுடன் திறந்த நேர்முகத் தேர்வின் மூலம் உள்ளீர்க்கப்பட வேண்டும். பின்கதவால் அரசியல் ரீதியாக வேலையாட்கள் உள்ளீர்க்கப்படுமானால் அதற்கெதிராக மக்களிடம் நேரடியாகச் செல்வோம் என ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தினை மீழப்பெறவேண்டும் இல்லையேல் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரேரணையானது 19.07.2018ம் திகதிய சபையில் வாதப்பிரதிவாதங்களுக்கோ கருத்து கேட்பதற்கோ இடம் கொடுக்காது நேரடியாக வாக்கெடுப்புக்குச் செல்ல முற்பட்ட வேளையில் குறித்த செயற்பாடானது கருத்துச் சுதந்திரத்திற்கு முரணானது.

அத்துடன் வெளிப்பாட்டுத் தன்மையுடன் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோருவதற்கு மக்கள் பிரதிநிதிக்கு உரிமை இல்லையா? மக்களின் நலன்சார்ந்து அவர்களின் பிரதிநிதியாகவே மாநகரசபையில் நாம் அங்கம் வகிக்கின்றோம்.

மக்களுக்காகவே நாங்களே தவிர அரசியல் தலைமைகளுக்காக மக்களல்ல என்பதுவே எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனின் சிந்தனை.

மாநகரசபையில் வெளிப்பாட்டுத்தன்மை வேண்டும் என்ற கோரிக்கை தவறானது அப்படி பேசமுடியாது என்று ஜனனாயகத்தின் குரல்வளையை நசுக்க முற்படுவதனை ஏற்க்க முடியாது என கூறி எமக்கான பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 05 உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தோம்.

வெளிநடப்பு செய்வது சட்டத்திற்கு முரணானதோ சபையை அவமதிப்பதோ என பொருட்படாது. நாம் தகாத வார்த்தை பிரயோகம் செய்ததாகவும் சபையில் அவமரியாதை செய்ததாகவும் அதனால் எம் 05 உறுப்பினர்களையும் ஒருமாத இடைக்கால தடை உத்தரவுக்கான பிரேரணை நிறைவேற்றியுள்ளதாகவும் பத்திரிகை வாயிலாக அறிந்தோம். எமக்கு இன்றும் உத்தியோகபூர்வமாக எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. கிடைத்தால் நாம் நீதிமன்றம் செல்லத் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.