வவுனியாவில் விமானப்படையின் வசம் உள்ள வீதியை விடுவிக்குமாறு கோரிக்கை!

வவுனியாவில் விமானப்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள வீதி ஒன்றினை விடுவிக்குமாறு வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்த சுதா கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, தச்சங்குளம் பகுதியில் இருந்து மூன்று முறிப்பு பிரதேசத்திற்கு செல்வதற்கான வீதி விமானப்படையினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றது.

தச்சங்குளம் பகுதியில் 48 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பாடசாலை, தாய் சேய் பராமரிப்பு நிலையம், கிராம அலுவலர் அலுவலகம் என்பவற்றுக்கு ஏ9 வீதியில் உள்ள மூன்று முறிப்புக்கே வரவேண்டியுள்ளது.

தச்சங்குளம் கிராமத்தில் இருந்து மூன்று முறிப்புக்கான இலகுவான போக்குவரத்து பாதை விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அப்பகுதி மக்கள் கோவில்குளம் மற்றும் ஈரட்டை உள்ளிட்ட வீதிகளின் ஊடாகவே பயணம் செய்ய வேண்டியுள்ளது. குறித்த வீதியூடாக நாளாந்தம் பல கிலோமீற்றர் தூரத்திற்கு பயணிக்கும் மாணவர்கள், கர்ப்பிணித் தாய்மார், நோயாளர்கள் என பலரும் அவதிப்பட வேண்டியுள்ளது.

இதனால், இந்த வீதியை விடுவிக்குமாறு அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் வவுனியா நகரசபையின் அமர்விலும் பிரேரணையாக முன்வைத்துள்ளேன் என்றும் வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்த சுதா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.