ஆளுனர், விக்கி, அனந்தி, சிவநேசனுக்கு டெனீஸ்வரன் அவசர கடிதம்!

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய
உத்தரவின் அடிப்படையில் தனது அமைச்சுப் பொறுப்புக்களை உடனடியாக மீளக் கையளிக்க வேண்டும் என்றும், இல்லையேல் நீதிமன்றை அவமதித்ததாக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்களான க.சிவநேசன், அனந்தி சசிதரன் மற்றும் ஆளுநர் ஆகியோருக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.
வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக, வாணிபம், வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கடிதத் தலைப்பில், அமைச்சர் என்று குறிப்பிட்டு பா.டெனீஸ்வரன் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
”மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜூன் 29ஆம் திகதி வழங்கிய இடைக்காலக் கட்டளையின் பிரதி, பிரதிவாதிகளான தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக, வாணிபம், வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரான என்னை எவரும் கட்டுப்படுத்த முடியாது.
எனது அமைச்சுக்களின் பொறுப்புக்களை தற்போது இருப்போர், அவற்றை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இது தொடர்பில் என்னால் கடந்த 7ஆம் திகதி தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் தொடர்ச்சியாக இந்தக் கடித்தத்தை அனுப்புகின்றேன்.
எனது அமைச்சுப் பொறுப்புக்களை உடனடியாக கையளிக்குமாறு அவற்றை வைத்திருப்போரிடம் கேட்டுக்கொள்கின்றேன். இதற்கு நடவடிக்கை எடுக்காவிடின் நீதிமன்றக் கட்டளையை மீறியதாக தங்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று டெனீஸ்வரன் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெனீஸ்வரனின் துறைகளில் போக்குவரத்து அமைச்சு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் உள்ளது. மீன்பிடி அமைச்சு, விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு அமைச்சர் கந்தையா சிவநேசனிடம் உள்ளது. வர்த்தக வாணிப அமைச்சு, மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் – விநியோகம் – தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்படுத்தல் அமைச்சு அமைச்சர் அனந்தி சசிதரனிடம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.