ரஜினி புரிந்துகொள்ளாத ‘ரசிகன் ஃபார்முலா’!

தமிழ் சினிமா ரசிகர்கள் திரைப்படங்களை பார்ப்பதிலும், ஆதரித்து
ஊக்குவிப்பதிலும் தெளிவாகவே இருக்கின்றனர். கடந்த ஆறு மாத காலத்தில் ரிலீஸ் ஆன படங்களில் இரும்புத் திரை, காலா, டிக் டிக் டிக் ஆகியவை பாக்ஸ் ஆஃபீஸில் முக்கியமான படங்களாக பார்க்கப்படுகின்றன.
25 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இரும்புத் திரை 320 திரையரங்குகளில் வெளியானது. டிக் டிக் டிக் 300க்கும் குறைவான தியேட்டர்களில் வெளியானது. இப்படங்கள் முதல் மூன்று வாரத்தில் தயாரிப்பாளருக்கு 15 கோடி ரூபாய் வசூலை தமிழகத்தில் பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படங்களுக்கு அதிகாலை சிறப்புக் காட்சி இல்லை. ரூபாய் 300, 500 என கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கப்படவில்லை.
ஊடகங்கள் இந்தப் படங்களுக்கு முதன்மை செய்திகளை எப்போதும் வெளியிட்டதில்லை. இரும்புத் திரை விஷால், டிக் டிக் டிக் ஜெயம் ரவி இருவரும் பரபரப்பான அரசியல் பேட்டிகளை கொடுத்து படத்திற்கு விளம்பரம் தேடவில்லை. இரண்டு படங்களையும் திரைப்பட விமர்சகர்கள் கொண்டாடவில்லை, ஆனால் வார கடைசி நாட்களில் இரும்புத் திரை, டிக் டிக், டிக் இரு படங்களையும் குடும்பத்துடன் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமா வரலாற்றை பின்னோக்கி பார்ப்பவர்களுக்கு இது ஆச்சர்யமான நிகழ்வாகத் தெரியாது. துள்ளுவதோ இளமை படத்தை பொழுதுபோக்காக பார்த்த இளைஞர்கள் அதே மாதிரி அடுத்து வந்த படங்கள் அனைத்தையும் நிராகரித்து ஓரங்கட்டினார்கள். விளம்பரமே இல்லாமல் வந்த காதல் கொண்டேன் படத்தை கல்லாவை நிரம்ப வைத்து கொண்டாடினார்கள்.
நல்ல சினிமாவையும், பொழுதுபோக்கு படங்களையும் எப்போதும் ஆதரிக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள், ரஜினிகாந்த் நடித்து வெளியான காலா படத்தை மூன்றாம் இடத்துக்கு தள்ளியிருக்கிறார்கள். தமிழகத்தில் 550 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட காலா படத்திற்கு அரசு ஆதரவுடன் அதிகாலை சிறப்புக் காட்சி நடைபெற்றது. 300 முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
காலா படத்திற்கு இலவசமாக ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம், சிறப்புச் செய்திகள் தமிழ் சினிமாவில் வேறு படங்களுக்கு கிடைத்ததில்லை. இத்தனை சிறப்பு வசதிகள் கிடைத்தும், ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் என இன்றுவரை ஊடகங்களால் எழுதப்பட்டு வரும் ரஜினிகாந்த் நடித்த காலா 21 கோடிக்கு மேல் வருமானத்தை தமிழகத்தில் ஈட்ட முடியவில்லை.
பொதுமக்களை பாதிக்கின்ற விஷயத்தில் எதிர்மறையாக ரஜினிகாந்த் கருத்து கூறியது தான் பட வசூல் பாதிக்கப்பட்டதற்கு காரணம் எனக் கூறப்பட்டாலும், இன்றைய சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உரிய வகையில் ரஜினி படங்கள் இல்லை என்பதையும் அவர்களே உணர்த்திவிடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.