வேட்பாளர் தேர்வு: தினகரன் தீவிரம்!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் 150 சட்டமன்றத் தொகுதியை குறிவைத்துத் தேர்தல் பணியை
வேகப்படுத்தி வருவதுடன் வேட்பாளர்களையும் தேர்வுசெய்துள்ளார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத்துக்கும் 2019ஆம் ஆண்டிலேயே தேர்தல் வரக்கூடும் எனக் கூறப்படுகிறது. எனவே இரு தேர்தல்களுக்குமே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாஜகவைப் பொறுத்தவரை அதன் தேசிய தலைவர் அமித் ஷா தேர்தலைச் சந்திப்பது தொடர்பாகத் தமிழக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை செய்துள்ளார். ஆளும்கட்சியான அதிமுகவுக்கு ஆட்சியைத் தக்கவைப்பதிலேயே நேரம் சரியாக உள்ளதால், தேர்தல் பணிகளை இன்னமும் தொடங்காமல் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான திமுகவிலும் தேர்தல் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இதற்கிடையே திமுகவில் தொடங்கியுள்ள களை எடுக்கும் நடவடிக்கைகளும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மு.க.ஸ்டாலின் களையெடுப்பதற்குப் பதிலாகப் பயிரை எடுத்துவருவதாகச் தனது சகோதரி செல்வியிடம் குறை சொல்லியுள்ளார் மு.க.அழகிரி.
ஆனால், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனோ சத்தமில்லாமல் தென்மாவட்டங்களில் 120 தொகுதிகளையும், வடமாவட்டங்களில் 30 தொகுதிகளையும் தேர்வுசெய்து ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்களையும் நியமித்து ஒரு தொகுதிக்கு ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்து பூத் கமிட்டி அமைத்துத் தேர்தல் வேலைகளில் வேகம் காட்டி வருகிறார்.
மேலும், தொகுதிக்கு மூன்று பேர் என 150 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பெயர் பட்டியலைத் தயார் செய்துவைத்துள்ளார் தினகரன்.
சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவும் அவர் ஆலோசித்து வருகிறார். நேற்று (ஜூலை 9) விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், வரும் தேர்தலில் கூட்டணி வைத்தாலும் வைக்காவிட்டாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அபார வெற்றி பெறும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வேண்டாம்; தனித்துப் போட்டியிடுவோம். குறைவான சீட் பெற்றாலும் பரவாயில்லை, அதிகமான ஓட்டுகள் வாங்குவோம். மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக வந்தாலும் பரவாயில்லை. மீண்டும் பாஜக வந்திடக்கூடாது என்ற மைன்ட் செட்டில் சசிகலாவும் தினகரனும் உள்ளனர். எனவே, சட்டமன்றத் தேர்தலில் திமுக,வுடன் மறைமுகமான கூட்டணிதான்’ என்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள்.
அதன்படி, மாதத்தில் சில நாட்கள் மட்டுமே தினகரன் சென்னையில் உள்ளார். பிற நாட்களில் மற்ற மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் இல்ல விசேஷங்களில் கலந்துகொண்டு வருகிறார். இது தொடர்பாக நமது மின்னம்பலத்தில் தேர்தல் பயணத்தைத் தொடங்கிவிட்ட தினகரன் என்ற தலைப்பில் முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.
தினகரன் மாஸ்டர் பிளான்களை அறிந்த பாஜக பிரமுகர்கள் பிரிந்தவர்களை ஒன்றிணைக்கும் வேலையில் இறங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள் ஆட்சியில் உள்ளவர்கள்.
அதன் முதல் நடவடிக்கையாகத்தான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று (ஜூலை 9) சென்னை வந்தார்.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் தமிழக அரசியல் சூழ்நிலைகளை அறிந்து சிலரை சந்திக்கவும் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தமிழகம் வர இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Powered by Blogger.