வைகோ – சரத்பவார் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசினார்.
பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுகவின் வெள்ளி விழா, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் பொதுவாழ்வுப் பொன்விழா ஆகிய மூன்றையும் இணைத்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழாவாக ஈரோட்டில் நடத்தப்படவுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அளவில் உள்ள பல்வேறு முக்கிய தலைவர்களை இந்த விழாவிற்கு அழைக்க வைகோ திட்டமிட்டுள்ளார். இதற்காக பல்வேறு தலைவர்களையும் சந்தித்து அவர் அழைத்து விடுத்து வருகிறார். அந்தவகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்பவாரை அவரது இல்லத்தில் இன்று (ஜூலை 19) சந்தித்த வைகோ முப்பெரும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
அதுபோன்று நேற்று (ஜூலை 18) இரவு, முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்காவை நேரில் சந்தித்து மாநாட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இருவரும் விழாவுக்கு வருவதாகக் கூறி வைகோவிடம் உறுதியளித்துள்ளனர்.
முன்னதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஆகியோருக்கு வைகோ நேரில் சென்று அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.