வாகரையில் ஊர்காவல் துறையினருக்கு காணி -யோகேஸ்வரன் எம்.பி. எதிர்ப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையில்
ஊர்காவல் துறையினருக்கு காணி வழங்கும் செயற்பாட்டை உடனடியாக வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துளாளர்.
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் மாங்கன்று நடுவதற்காக ஊர்காவல் துறையினர் 25 ஏக்கர் காணி கோரியுள்ளனர் இவ்விடயம் தொடர்பாக அப்பிரதேச செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
‘மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மாங்கன்று நடுவதற்காக ஊர்காவல் துறையினர் 25 ஏக்கர் காணி கோரி விண்ணப்பித்துள்ளதாக அறிகின்றேன்.
இச்செயற்பாடுகள் மாகாண காணி ஆணையாளரின் ஆலோசனையில் இடம்பெறுகிறது. ஊர்காவல் துறையினருக்கு காணி இங்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை எனில் அவர்கள் பொலன்னறுவை மாவட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஏன் இங்கு இவர்கள் காணி கோர வேண்டும். அத்தோடு இவர்களுக்கு இப்போது தொழில் மரம் நடுகை தொழிலா என சந்தேகிக்க தோன்றுகின்றது.
உண்மையில் இதில் ஏதோ ஒரு இன ரீதியான திட்டம் அமைந்துள்ளது. எனவே எமது மாவட்ட மக்கள் பலர் காணி இன்றி கஷ்ரப்படும் நிலையில் இவர்களுக்கு காணி வழங்க முடியாது. ஆகவே பிரதேச செயலகம் இதற்கு காணி வழங்கும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் என கோருகின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாஹம, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி.அனுர தர்மதாஸ, மட்டக்களப்பு மாவட்டச் செயலர் மா.உதயகுமார் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.