மாணவி உயிரிழப்பு: தனிப்படைகள் அமைப்பு!

கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


கோயம்புத்தூர் மாவட்டம் நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி, கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று (ஜூலை 12) இக்கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது, பயிற்சியாளர் தள்ளிவிட்டதால் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்த மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இது தொடர்பாக, பயிற்சியாளர் ஆறுமுகத்தை விசாரித்து வந்த ஆலாந்துறை காவல்துறை இன்று (ஜூலை 13) காலை அவரைக் கைது செய்தனர்.

இது தொடர்பாக பேரூர் டிஎஸ்பி வேல்முருகன் கூறுகையில் “பேரூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் ஆலந்துறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் ஆறுமுகம் ஒரு மாற்றுத்திறனாளி. பயிற்சியளிப்பதற்காக அவர் கொடுத்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை. இந்த போலி ஆவணங்களை வைத்து, அவர் தமிழகம் முழுவதும் பயிற்சியளித்து வந்ததாகக் காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. கலைமகள் கல்லூரியில் பயிற்சியளிப்பதற்காக 2017ஆம் ஆண்டு ஒரு முறையும், 2018 ஜூலை 3ஆம் தேதியும் அனுமதி கோரி கடிதம் கொடுத்துள்ளார் ஆறுமுகம்.

இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரி ரேகா கூறுகையில் “பள்ளி, கல்லூரிகளில் இனி தனியார் நபர்களை வைத்து பாதுகாப்புப் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. பயிற்சி அளிப்பதற்குக் கல்வி நிறுவனங்கள் முன் அனுமதி பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.

மாணவி உயிரிழப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டார். அதில், “மாணவி உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். உயிரிழந்த லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணவர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் கல்லூரி கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் நடந்த பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு லோகேஸ்வரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் கோவை அருகே மத்வராயபுரம் மின்மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.


Powered by Blogger.